
விளாத்திகுளம் அருகே மின் டவரில் ஏறி மாற்றுத்திறனாளி இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் முனியசாமி (33). மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் தனது குடும்பத்தின் வறுமை காரணமாக சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும், மிகவும் சேதமடைந்து காணப்படும் தனது வீட்டை சரி செய்து தர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது கோரிக்கையை தெரியப்படுத்த வேண்டும் என்று சென்னைக்கு சென்றும் அவரை பார்க்க முடியாத காரணத்தினால் மிகவும் மன விரக்தி அடைந்த முனியசாமி இன்று என். வேடப்பட்டி கிராமத்தின் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள மின்சார டவரில் ஏறி அமர்ந்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின் இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து மின் டவரில் அமர்ந்து கொண்டிருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முனியசாமியிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஏணி மூலம் பத்திரமாக இறங்கச் செய்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். பின்னர் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் எட்டையபுரம் வட்டாட்சியர் சுபா ஆகியோர் முனியசாமியிடம், அவரது கோரிக்கை குறித்து கேட்டறிந்து மனுவாக அளிக்கும்படியும், இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.