
நெல்லை முதல்வர் வருகையால் செய்துங்கநல்லூரில் பேருந்து இன்றி தவித்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இங்-கு உள்ள பஸ் நிலையத்தில் சுற்று பகுதியில் உள்ள 42 கிராமத்துக்கு மக்கள் வந்து பஸ் ஏறுவார்கள். தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை எப்போதுமே மாணவ மாணவிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலை அது போலவே கூட்டம் இருந்தது. ஆனால் எப்போது வரும் பேருந்து இன்று வரவில்லை. மாறாக வந்த பேருந்தும் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் மாணவ மாணவிகளை ஏற்ற இயலவில்லை. எனவே நேரம் செல்ல செல்ல மாணவ மாணவிகள் கூட்டம் அதிகமானது. இதனால் வரும் பேருந்தை நிறுத்தி அதில் மாணவ மாணவிகளை ஏற்றி விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் அங்கு சமூக சேவர்கள் பலர் வந்து சேர்ந்தனர். அவர்கள் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் கூறினர். செய்துங்கநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் காசி அங்கு வந்து பேருந்துகளை நிறுத்தி, மாணவ மாணவிகளை ஏற்றினார். இதனால் பேருந்தில் கூடுதல் மாணவ மாணவிகள் ஏறினர். மாணவர்களை அங்கு வந்த மற்ற வாகனங்களில் ஏற்றி பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, எப்போதுமே செய்துங்கநல்லூரில் காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் பேருந்து அதிகம் வருவது கிடையாது எனவே பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இன்று முதல்வர் வருகையால் பல பேருந்து திருப்பி விடப்பட்ட காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. காவல் துறை உதவியுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க காலை வேளையில் அதிகமான பேருந்தை செய்துங்கநல்லூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க கூடுதல் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.