உலகப்பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, அன்னையின் திருவுருவச் சப்பர பவனி கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு ஜெபமாலை, மறை உரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதங்கள் நடைபெற்றன. பெருவிழா தினமான நேற்று அதிகாலை 4:30 மணி முதல் சிறப்புத் திருப்பலிகள் தொடங்கின.
காலை 7:30 மணிக்குத் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற பெருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன், முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிரியார்கள் இணைந்து பல கட்டச் சிறப்புத் திருப்பலிகளை நிறைவேற்றினர்.
மாலை 5:00 மணிக்கு நிறைவுத் திருப்பலி முடிந்ததும், இரவு 7:00 மணியளவில் மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய அன்னையின் திருவுருவம் வைக்கப்பட்டுச் சப்பர பவனி தொடங்கியது.
அன்னையின் சப்பரம் பேராலய வளாகத்திலிருந்து புறப்பட்டு செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, எம்பரர் தெரு, பெரைரா தெரு, பிரெஞ்சு சாப்பல் தெரு, ஜி.சி. சாலை, வி.இ. சாலை மற்றும் தெற்கு கடற்கரை சாலை வழியாகப் பவனி வந்து மீண்டும் பேராலயத்தை அடைந்தது. பவனியின் போது வீதி உலா வந்த அன்னைக்குச் சாதி, மத பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். நிறைவாக, பேராலய வளாகத்தில் குடும்பங்களை அன்னைக்கு ஒப்புக் கொடுக்கும் நிகழ்வும், நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டன.
பெருவிழாவினையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஜான் செல்வம், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு, அருட்சகோதரர் மைக்சன், பங்கு பேரவையினர் மற்றும் இறைமக்கள் இணைந்து செய்திருந்தனர்.


