2023 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய பெருவெள்ளம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. ஆற்றில் மண்டிக்கிடந்த முட்செடிகளே வெள்ளநீர் ஊருக்குள் புகுவதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, 2024 ஜூலை 6-ஆம் தேதி அப்போதைய ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில், கனிமொழி எம்.பி. அவர்களால் நதி சுத்தப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக முத்தாலங்குறிச்சி காமராசு நியமிக்கப்பட்டார்.
கொமஸ்டா (Comsta) நிறுவனம் வழங்கிய வாடகை இல்லா இயந்திரம் மூலம் எக்ஸ்னோரா (Exnora) நிறுவனம் இந்தப் பணியைத் தொடங்கியது. மருதூர் அணையில் இருந்து தொடங்கிய இந்தப் பணி, போதிய நிதியின்றித் தவித்தது.
பின்னர் முன்னாள் ஆட்சியர் இளம்பகவத் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகம் டீசல் மற்றும் ஓட்டுநர் ஊதியப் பொறுப்பை ஏற்றது. இதனால் பணி மீண்டும் தங்கு தடையின்றித் தொடர்ந்தது. இதன் விளைவாக முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கருங்குளம், கொங்கராயகுறிச்சி பகுதிகளில் பல ஆண்டுகளாகப் புதர்மண்டிக் கிடந்த தாமிரபரணி மீண்டும் தனது பழைய எழிலுடன் காட்சியளிக்கத் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கம் மற்றும் ‘கிராம உதயம்’ மகளிர் குழுவினரின் உதவியுடன், ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை 12 கிலோமீட்டர் தொலைவு ‘மாதிரி தாமிரபரணி’யாக மாற்றப்பட்டது. இதனால் 25 வருட காலமாக வளர்ந்திருந்த முள்செடிகள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக, 2025-இல் வந்த வெள்ளத்தின்போது இப்பகுதியில் ஊருக்குள் நீர் புகாமல், எந்தவிதப் பாதிப்பும் இன்றி நேராகக் கடலுக்குச் சென்று சேர்ந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் கருங்குளம் சம்பன்குளம் தூர்வாரப்பட்டு, கரைகள் மேம்படுத்தப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை மாதிரி தாமிரபரணி நதி உருவாக்கப்பட்டதுடன், இரண்டரை லட்சம் பனைவிதைகளும் விதைக்கப்பட்டன. மேலும், ஒரு லட்சம் விதைப்பந்துகளைப் பள்ளி மாணவ, மாணவியர் ஆற்றங்கரைகளில் வீசி பசுமை இயக்கத்தில் பங்கேற்றனர். இப்பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம், எக்ஸ்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் ஆகியவை துணைநின்றன.
முதற்கட்டமாக, ஆழ்வார்திருநகரியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் ஒரு லட்சம் பனைவிதைகளும், 1,000 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை மாணவர்கள் ஆற்றங்கரைகளில் வீசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மூன்றாம் கட்டமாக, ஸ்ரீவைகுண்டத்தில் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு தலைமையில் கரைகளைப் பலப்படுத்தும் நோக்கில் பனைவிதைகள் நடப்பட்டன.
நான்காம் கட்டமாக, உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பொன்னன்குறிச்சி பகுதியில் அடர்ந்த முட்செடிகள் அகற்றப்பட்டு, அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.
ஐந்தாம் கட்டமாக, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாகீர் மூலம் ஆதிச்சநல்லூர் கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த இயந்திரம் பழுதாகிவிட்டது. அதைச் செப்பனிட ₹2 லட்சம் நிதி தேவைப்பட்டதால் பணி இடையில் நின்றது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் சமூகசேவகர் சித்திரைவேல், பொன்னன்குறிச்சி துரை ஆகியோரின் முயற்சியால், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை சரவணன் தனது முதல் மாதச் சம்பளமான ₹80,000-ஐ இந்தப் பணிக்காக வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாகீர், திருத்து கருப்பசாமி பாண்டியன் ஆகியோரின் உதவியுடன் பழுது நீக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு பணி மீண்டும் தொடங்கியது.
இந்தப் பணி மாவடிபண்ணை தாமிரபரணி ஆற்றில் நடைபெற்றது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றுக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, பணிகளுக்கான பூமிபூஜையும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூகசேவகர் சித்திரைவேல், மாவடிபண்ணை சுப்பையா பண்ணையார், தலைமை ஆசிரியர் மகேஷ் துரைசிங், குமரேசன், தென்திருப்பேரை பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், தீரன் கணபதி, ஷ்யாம் கிரிதாஸ், அப்பாத்துரை, பொன்னன்குறிச்சி துரை உட்படப் பலர் கலந்துகொண்டனர்.


