தனியார் கல்லூரியில் சிக்கியிருந்த மாணவனின் டிசி உள்ளிட்ட அசல் சான்றிதழ்கள் தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டால் உடனடியாக மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஓசநூத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த தனது பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் (TC) உள்ளிட்ட அசல் கல்விச் சான்றிதழ்களைத் திரும்பப் பெற்றுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை 04.08.2026 அன்று விசாரணை செய்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும் அமர்வு நீதிபதியுமான பி.வி. வஷீத்குமார், மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, நேற்று இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், மாணவனின் அசல் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்தால் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக மாணவரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் இம்மனுவிற்குத் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
இவ்வழக்கின் முடிவில் அமர்வு நீதிபதி/தலைவர் தெரிவிக்கையில், “கல்வி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சார்ந்த குறைகள் எதுவாக இருப்பினும், பொதுமக்கள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம். இங்கு எவ்வித கட்டணமுமின்றிப் புகார்களுக்குச் சுமூகமான முறையில் தீர்வு காணலாம்” எனத் தெரிவித்தார்.


