வல்லநாட்டில் உள்ள தனியார் மகளிர் சட்டக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 36 மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதைக் கண்டித்து, மாணவிகள் 2-வது நாளாகத் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு அருகே ‘துளசி பெண்கள் சட்டக்கல்லூரி’ செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் முதலாமாண்டு சட்டப் படிப்பிற்கு (LL.B) மொத்தம் 96 மாணவிகள் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், இக்கல்லூரிக்கு 60 மாணவிகளை மட்டுமே சேர்க்க சட்டப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்திருந்தது. இதையறியாமல் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 36 மாணவிகளும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலாமாண்டு தேர்வுகள் நடைபெற்றபோது, இந்த 36 மாணவிகளுக்கும் தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Hall Ticket) வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகம் பல்கலைக்கழகத்தில் பேசி அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.தற்போது இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையிலும், அந்த 36 மாணவிகளுக்கான அனுமதியைப் பெற கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கல்லூரிக்கான பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதைச் சரிசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மாணவிகள் தொடர்ந்து வகுப்புகளுக்கு வர வேண்டும் என்றும் கல்லூரித் தகவல் பலகையில் (Notice Board) நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இது மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்துக் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டபோது முறையான விளக்கம் அளிக்கப்படாததால், பாதிக்கப்பட்ட 36 மாணவிகளும் நேற்று கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் உரிய பதில் அளிக்காததால், இரவு முழுதும் கல்லூரி வளாகத்திலேயே தங்கி உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
நேற்று 2-வது நாளாகப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தகவலறிந்து வந்த வல்லநாடு காவல் ஆய்வாளர் ஹரிகரன் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, “கல்லூரியைச் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமே ஏற்று நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட 36 மாணவிகளுக்கும் உடனடியாகப் படிப்பைத் தொடர உரிய அனுமதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தி மாணவிகள் தீவிரமாகக் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


