விளாத்திகுளத்தில் நடைபெற்ற கோவில் ஆடிக் கொடை விழாவில், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமியின் முழு உருவத்தில் வளர்க்கப்பட்ட தத்ரூப முளைப்பாரி ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் – வேம்பார் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவசாமி திருக்கோவிலில் இந்த ஆண்டிற்கான ஆடிக் கொடை விழாவையொட்டி, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி மற்றும் விநாயகரின் உருவங்களை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் வகையில் முளைப்பாரி வளர்த்திருந்தனர். பக்தர்களின் பக்தி உணர்வையும் நேர்த்திக்கடனையும் வெளிப்படுத்தும் வகையில் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த முழு உருவ முளைப்பாரிகள், காண்போரைக் பெரிதும் கவர்ந்தன.
கோவிலில் சுவாமிக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டது. இவ்வூர்வலம் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, எட்டயபுரம் ரோடு, மார்க்கெட் ரோடு மற்றும் விளாத்திகுளம் பேருந்து நிலையம் வழியாகச் சென்று, இறுதியாக வைப்பார் ஆற்றுப்பாலம் பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முளைப்பாரிகளைத் தரிசித்து அருள் பெற்றனர்.
இந்த ஆடிக் கொடை விழாவில் விளாத்திகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


