தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி நாளை (திங்கட்கிழமை) இரவு இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயிலை மாநகரப் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பயணிகள் நலச் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தூத்துக்குடி – சென்னை தாம்பரம் வாராந்திரச் சிறப்பு ரயில் வண்டி எண் 06018 நாளை (06-07-2026, திங்கள்) இரவு 11:30 மணியளவில் தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. இந்தச் சிறப்பு ரயில் மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மதியம் 12:30 மணியளவில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இச்சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு புறப்படவுள்ள இச்சிறப்பு ரயிலில் அனைத்து வகுப்புகளுக்கான தற்போதைய முன்பதிவுப் பிரிவிலும் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. எனவே, தூத்துக்குடி மாநகர மற்றும் மாவட்டப் பயணிகள் தங்களது சென்னை பயணத்திற்கு இந்தச் சிறப்பு ரயிலை அதிக அளவில் பயன்படுத்தி, இதனை முழுமையாக ஆதரிக்குமாறு தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கப் பொறுப்பாளர் மா. பிரமநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.


