சாத்தான்குளம் பேருந்து பணிமனையை உடனடியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத், நாலுமாவடி, ஏரல் வழியாக இராமேஸ்வரம், கோயமுத்தூர், திருப்பூர், திருச்சி, தேனி, குமுளி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர், போக்குவரத்துத் துறை, மீன்வளத்துறை மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு மாநிலப் பயணியர் நலச் சங்கப் பொறுப்பாளர் சாந்தகுமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இந்த மனுவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கும் அவசரக் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டுச் சாத்தான்குளம் பேருந்து பணிமனையை (Depot) உடனடியாகத் தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்தத் டெப்போ எந்தவித உள்கட்டமைப்பு முன்னேற்றமும் இன்றி, அனாதைப் பிள்ளையாகத் தவித்து வருவதாக மனுவில் சாந்தகுமார் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, தென் மாவட்டப் பொதுமக்களின் நீண்ட காலப் போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொண்டு, சாத்தான்குளம் பணிமனையை நவீனப்படுத்தி, புதிய பேருந்துகளை உடனடியாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


