ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் இன்று நேரில் சென்று திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட திருப்புளியங்குடி அங்கன்வாடி மையத்திற்கு இன்று சென்ற மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், அங்குள்ள குழந்தைகளின் வருகைப் பதிவேட்டைச் சரிபார்த்தார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், ஊட்டச்சத்து விபரங்கள் மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் அளவிடப்படும் முறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் சன்னதி தெருவில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்குச் சென்று, அங்குக் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், அங்கு வரவிருக்கும் ‘தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027’ பணிகள் தொடர்பாகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆரம்பகட்ட ஆயத்தப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஆவணங்கள் தயார் நிலை குறித்துப் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி ஆய்வு செய்தார்.


