தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மணல் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் அருகே சோதனைச் சாவடி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த புன்னகாயல், அந்தோணிசாமி மகன் ஜேசுராஜ் (38), என்பவரை கடந்த 04.12.2021 அன்று ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டி பாலம் அருகில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குலசேகரநத்தம் கருப்பசாமி மகன் பச்சைபெருமாள் (29), என்பவரை
கடந்த 18.12.2021 அன்று ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர்.
முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்ட அகரம், தங்கப்பாண்டி மகன்ரமேஷ் (29), பொன்னன்குறிச்சி துரைசாமி மகன் முருகன் என்ற படையப்பா (22), ஆகிய இருவரை கடந்த 10.12.2021 அன்று செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
மேற்படி வழக்குகளின் முக்கிய குற்றவாளிகளான ஜேசுராஜ், பச்சைபெருமாள் மற்றும் ரமேஷ் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2021ம் ஆண்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 25 பேர் மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 203 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.


