
செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் பஞ்சத்திற்காக சண்முகையா எம்.எல்.ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஓட்டபிடாரம் தொகுதி கருங்குளம் ஒன்றிய அலுவலகத்துக்கு உள்பட்ட பஞ்சாயத்துகளில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா நன்றி கூற சென்றார். அப்போது மக்கள் அவரிடம் பல குறைகள் கூறி மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ அது குறித்து கருங்குளம் ஒன்றிய அலுவலத்தில் வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சண்முகையா எம் .எல்.ஏ அவர்களிடையே பேசும் போது, நான் நன்றி தெரிவிக்க சென்ற இடத்தில் பெரும்பாலும் தண்ணீர் பிரச்சனை பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. மக்கள் குடிதண்ணீருக்காக படாத பாடு படுகிறார்கள். எனவே மக்களுக்கு குடிதண்ணீர்தட்டுபாடு இன்றி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். வி.கோவில்பத்தில் கட்டப்பட்டிருக்கும் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்ற அனைத்து நடவடிக்கையும் உடனே எடுக்க வேண்டும். முத்தாலங்குறிச்சியில் புதிய குடிதண்ணீர் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். வல்லநாடு மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதியில் தண்ணீர் சீராக வழங்க அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், முத்துலெட்சுமி, பரஞ்சோதி, பொறியாளர்கள் நேரு, பீர்முகம்மது. ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு கருங்குளம் ஒன்றிய தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கருங்குளம் ஒன்றியம் வருகை தந்த சண்முகையா எம்.எல்.ஏவை ஒன்றிய செயலாளர் மகராஜன் தலைமையில், தோணி அப்துல் காதர் உள்பட திமுகவினர் வரவேற்றனர்.