நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள காக்கரையில் காவ்யா பதிப்பகம் மூலமாக 8 நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது. பேராசிரியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார், வடக்கன் குளம் புலவர் சேசய்யா, பத்மநேரி முத்தையா, டாக்டர் வே. சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் நடராஜன் வரவேற்றார். பொன்னீலன் நூல்களை வெளியிட்டார். பொன்னீலன் எழுதிய என்னைச் செதுக்கியவர்களை நூலை செந்தி நடராஜன் பெற்றுக்கொண்டார். முத்தாலங்குறிச்சி காமராசுவின் தென்னாட்டு ஜமீன்கள் நூலை எழுத்தாளர் சரலூர் ஜெகன் பெற்றுக்கொண்டார். பேராசியரியர் அ.கா.பெருமாளின் கவிமணி கட்டுரைகள் நூலை பேராசியர் கலையரசு பெற்றுக்கொண்டார். சோமசுந்தரத்தின் குறள் அமுதம் நூலை நல்லாசிரியர் டி.எஸ். விநாயகம் பெற்றுக்கொண்டார். நா. நாகராஜனின் கால்படாத தேசம் நாவலை தூத்துக்குடி முருகேசன் பெற்றுக்கொண்டார். புதிய மாதவியின் ரசூலின் மனைவியாகிய நான் சிறுகதை தொகுதியை ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாறு ஆசிரியர் ரேவதி பெற்றுக்கொண்டார். முனைவர் சுகந்தி அன்னத்தாயின் நாட்டுப்புறச் சிறார் வழக்காறுகள் நூலை முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைதலைவர் ந.தர்மராஜ் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர் சு. சண்முகசுந்தரத்தின் நெல்லை மறவர் கதைப்பாடல்கள் நூலை ஆசிரியர் ஐயப்பன் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர் பொன்னீலன் பேசும் போது, கிராமத்தில் வாசிப்பு திறன் மிகவும் குறைந்து விட்டது. இதை பெருக்க வேண்டும் என்றால் கிராமங்களில் புத்தக வெளியிட்டு விழா நடத்த வேண்டும். தற்போது வள்ளியூர் அருகில் உள்ள காக்கரை என்னும் குக்கிராமத்தில் இந்த நூல்வெளியிட்டு விழா நடந்துகொண்டிருப்பது மனதுக்கு சந்தோஷத்தினை தருகிறது. இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நூல் வெளியிட்டு விழா நடத்த வேண்டும் . இதனால் கிராம மக்களிடமும் வாசிப்பு திறன் அதிகரிக்கும். அதோடு மட்டுமல்லாமல் கிராமங்களை நோக்கி எழுத்தாளர்கள் வரும்போது அவர்களின் எழுத்து புது தேடலை தேடிச்செல்லும் என்று அவர் பேசினார்.
பேராசிரியர் ஹரிஹரன், கணேசன் உள்பட பலர் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டனர். முனைவர் முருகேசன் நன்றி கூறினார்.


