முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா, கருங்குளத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி ஒருவர் அப்துல் கலாம் உருவத்தினை பனை ஓலையில் செய்து அசத்தியுள்ளார்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(65). பனை தொழிலாளியான இவர், கடந்த இரண்டு வருட காலமாக பனை ஓலை மூலமாக பல உருவங்களை உருவாக்கி வருகிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் பனை ஓலை மூலம், இந்து ஆலயம், தாஜ்மகால், கிறிஸ்தவ ஆலயம், யானை, ஒட்டகம், பீரங்கி உள்பட பல பொருள்களை உருவாக்கி இருந்தார். பனை ஓலையில் பலவித பொருட்கள் செய்ததற்காக இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தது. இதனால் உற்சாகத்துடன் செயல்பட்ட அவர் கடந்த வருடம் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் உருவத்தினை பனை ஓலையில் செய்தார். இவர் 7 அடி உயரத்தில் காமராஜர் உருவத்தினை பனை ஓலையில் செய்து, காமராஜர் உருவத்திற்கு சட்டை, வேஷ்டி, கழுத்தில் போடப்பட்டிருக்கும் சந்தனமாலை உள்பட அனைத்தையும் பனைஓலை மூலமாகவே செய்தார். தற்போது அவரது வீட்டு வாயிலில் அவர் பனைஓலையால் செய்யப்பட்ட காமராஜரை உருவ சிலையை பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார். இதனை காண வரும் பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த வருடம் கூட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காமராஜர் பிறந்த தினவிழாவை முன்னிட்டு , இந்த பனை ஓலை உருவத்துக்கு மாலை அணிவித்து வணங்கி நின்றனர். இதனால் உற்சாகம் அடைந்த பால்பாண்டி தொடர்ந்து அப்துல் கலாம் உருவத்தினை பனை ஓலையில் செய்ய முயற்சி செய்தால். இதன் பலனாக கடந்த 6 மாத காலமாக தீவிர உழைப்புக்கு பின் அப்துல்கலாம் தாயராகி உள்ளார். அதை அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று பொதுமக்களிடையே பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து பால்பாண்டி கூறும் போது, நான் சிறு வயது முதலே பனை தொழில் புரிவதில் ஆர்வமாக இருந்தேன். பனை ஏறி பதனீர் இறக்கி வந்தேன். ஒரு விபத்தின் போது என்னால் பனை ஏற முடியவில்லை. எனவே பனை ஓலையில் இருந்து பொருள்கள் செய்யும் பணியை சிறப்பாக செய்து வந்தேன். ஓலை பெட்டி, நார் பெட்டி போன்றவை செய்து கொண்டிருந்த எனக்கு தாஜ்மகால், கோபுரம், ஆலயம், யானை, பீரங்கி, ஒட்டகம் போன்ற பொருள் செய்ய ஆசைபட்டேன். அதன் முயற்சி வீண் போகவில்லை. கடந்த பொங்கலையொட்டி ஏர்கலப்பை, ஏர் உழவன், உழத்தி போன்றவர்கள் உருவம் செய்து சந்தோஷப்பட்டேன். எனக்கு பிடித்த தலைவர் கர்மவீரர் காமராஜர். அவரின் உருவத்தினை பனை ஓலையில் செய்ய ஆசைப்பட்டேன். அதை செய்து முடித்தேன். அப்துல் கலாம் அவர்கள் என மனதுக்கு பிடித்த மற்றுமொழ தலைவர் எனவே அவர் உருவம் செய்ய ஆசைப்பட்டேன். அப்துல் கலாம் முடி, கோர்ட் சூட் எல்லாம் எனக்கு சவாலாக அமைந்தது. எனவே அதற்காக கடந்த 6 மாத காலமாக இரவு பகல் கடுமையாக பணியாற்றினேன். அதன் பயனாக தற்போது அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு 7 அடிக்கு அப்துல்கலாம் உருவத்தினை பனை ஓலையில் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளேன் என்றார்.
இதேபோல் உலக அதிசயங்கள் 7 யையும் பனை ஓலையில் செய்ய வேண்டும் என்பது பால்பாண்டி அவர்களின் கனவு. இவர் ஏற்கனவே தாஜ்மாகலை செய்து விட்டார். தற்போது ஈகிள் டவரையும் செய்து அசத்தியுள்ளார். மற்ற உலக அதிசயங்களை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்.
பனை தொழிலாளியின் இந்த கலை ஆர்வம் அனைவரையும் ஆச்சரியத்தில் உரைய வைக்கிறது ஆச்சரியபட வைக்கிறது. மேலும் இவரை ஊக்குவிக்க அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்துகளாய் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இதுபோன்ற பனை தொழிலாளிகள் பலர் உள்ளனர். இவர்களுக்கு போதிய வருமானமோ, வாழ்வாதராம் இல்லை. எனவே இவர்கள் பிரச்சனை தீர்த்து, இவர்களை ஊக்கப்படுத்த அரசு முன்வரவேண்டும். இதுபோன்ற தொழிலை சந்தை படுத்துவும், தொழில் செய்பவர்களை ஊக்கப்படுத்தவும் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.