சிங்கம்பட்டி ஜமீன்தார் என் வாழ்வில் சந்தித்த அற்புத மனிதர். இந்தியாவிலேயே பட்டங்கட்டி வாழ்ந்த கடைசி ஜமீன்தார் என்ற பெருமை கொண்டவர். அவரை நான் முதல்முதலில் கண்டுகொண்ட போதே ஆனந்தம் அடைந்துள்ளேன். பெரும் மகாராஜாவான அவர் நம்மிடமெல்லாம் எங்கே பேசப் போகிறார் என்று நினைத்த போது, என்னை அழைத்து அரண்மனை பெருமைகளைக் கூறினார் . அதோடு மட்டுமல்லாமல் அவர் அருங்காட்சியகம் உள்ளே திறந்து காட்டச்சொன்னார். அவருடைய நேர்முக உதவியாளர் கிட்டு அய்யா அவர்கள் என்னை அங்கேயெல்லாம் கூட்டிக்கொண்டு காட்டினார்.
அதோடு மட்டுமல்லாமல் என்னையும் தற்போது டெல்லியில் தினமணி புகைப்பட கலைஞராக பணியாற்றும் ராமகிருஷ்ணன் அவர்களையும் அழைத்து அரண்மனை விருந்து வைத்து அனுப்பினார்கள். அரண்மனை விருந்து என்றால் எப்படி இருக்கும் என்பதை நான் அன்று தான் அறிந்து கொண்டேன்.
அதோடு மட்டுமல்லாமல் சிங்கம்பட்டி ஜமீன்தார் குறித்து தனியாக ஒரு வரலாற்றுப் புத்தகம் எழுதவும் வாய்ப்பு தந்தார்கள். அந்த நூலை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. அந்த புத்தக வெளியிட்டு விழாவிற்கு வந்த ஜமீன்தார் எனக்கு வெள்ளி குங்கும சிமிழ் பரிசாக அளித்து என்னை அரண்மனை கலைஞர் என வாழ்த்திப் பேசினார்.
நான் தற்போது 20 ஜமீன்தார்கள் வரலாற்றை எழுதி இருக்கிறேன் என்றால் அதற்கு ஆர்வத்தைத் தூண்டியவர் சிங்கம் பட்டி ஜமீன்தார்தான். அய்யா அவர்கள் இந்த புண்ணிய பூமியில் வாழ்ந்த சித்தர். அவருக்குத் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சிலை வைக்கவேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் பாவநாசத்தில் மணி மண்டபம் அமைக்கவேண்டும் என்பது என்னைப் போன்றவர்கள் கோரிக்கை. இந்த மண்ணுக்கும், தமிழ்இனத்துககும், தாமிரபரணி நதிக்கும் நிறையச் செய்தவர். மறைந்தாலும் தற்போது நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர். நம்மால் மறக்க முடியாத மாமனிதர். வாழ்க உங்கள் புகழ் மகாராஜா
– அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு