தேனி.மு. சுப்பிரமணியன். இந்த பெயருக்குள் ஆயிரம் அரத்தங்கள் ஒளிந்து இருக்கும். காரணம் இவர் ஒரு ஆன்மிக எழுத்தாளர். தினத்தந்தி உள்படப் பல முன்னணி பத்திரிக்கையில் ஆன்மிக கட்டுரை எழுதுபவர். ஆனாலும் கணினித் துறையில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். இதனால் தான் இவரது கணினி சம்பந்தப்பட்ட நூலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விருது வழங்கிக் கௌரவித்துள்ளார். ஆனாலும் முதலமைச்சர் விருது பெற்றவர் என்ற ஆணவம் கிடையாது. சக எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, அவர்களை ஒருங்கிணைப்பது, அவர்களது எழுத்துக்களை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவது. தேனி தமிழ்ச்சங்கம் மூலமாக பல்வேறு நற்பணிகளைச் செய்வது, முத்து கமலம் என்னும் மின்னிதழ் மூலமாக எழுத்துப்பணியில் பயணிப்பது என பல்வேறு தளங்களில் இயங்கி கொண்டிருக்கிறார். தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல் என (100 episode) உற்சாகத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறார்.தினகரன் கல்வி வேலை வழிகாட்டி தகவல்களை எழுதி வரும் இவர் தற்போது விகடனிலும் கல்வி வேலை வழிகாட்டி தகவல்களை எழுதி வருகிறார்.
இவருக்கு எப்படி இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறது என்பது தெரியவில்லை. உலக அளவில் உள்ள மிகப்பெரிய எழுத்தாளர்களை எல்லாம் ஒருங்கிணைக்கவேண்டும் என்றால் இவர் ஒருவரால் தான் முடியும். அந்த அளவுக்கு உலகத் தமிழர்கள் தொடர்பை வைத்துக்கொண்டவர். முல்லை பெரியார் கரையில் வளர்ந்து தமிழை அள்ளிப்பருகி, அதை அனைவரும் இன்பமுற பகிர்ந்து கொடுத்தாலும் , அவர் பிறந்த மண் தாமிரபரணி கரை, எங்கள் தூத்துக்குடி மாவட்டம் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை.
– அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு