3. மக்கள் மனதில் வாழும் வசந்தகுமார் அண்ணாச்சி
தாழ்வு மனப்பான்மையில் பல திறமைசாலிகள் தங்களை இழந்து, தங்கள் திறமைகளை இழந்து பரிதவிக்கும் அவலங்களை நாம் உலகில் காணலாம். ஆனால் முயற்சி, உண்மை, நாணயம் இதை மட்டுமே மூலதனமாக வைத்து இந்தியாவில் நம்பர் ஒன் டீலர் என்று வசந்த அன் கோவை கொண்டு சென்றவர். இன்றைய அரசியல் வாழ்வில் வாழும் காமராஜராக வாழ்ந்து மறைந்த கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர். தான் சம்பாதித்த பணத்தினை தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு விதத்தில் செலவழித்து மகிழ்ந்தவர். நல்ல எழுத்தாளர். நல்ல தன்னம்பிக்கை பேச்சாளர். நெல்லை மண் பேசும் சரித்திரம் மூலமாக வசந்த தொலைக்காட்சியில் என்னை அறிமுகம் செய்து , மண்ணின் பெருமையை உலகிற்கு இயம்பியவர். நெல்லை, ஜமீன்தார், மலைகள், சித்தர்கள், உள்பட பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுத முதல் புள்ளி வைத்தவர், எங்கள் அண்ணாச்சி வசந்த் குமார் அவர்கள். எங்கு என்னைப் பார்த்தாலும் என்ன ஆராய்ச்சி டீம் வந்துட்டா எனச் சிரித்த முகத்தோடு கேட்பார். இன்று நம்மோடு இல்லை. இன்று அவருக்குக் கன்னியாகுமரி மாவட்டத்தில் நினைவு மண்டபம் திறக்கிறார்கள். அவர் எப்போதும் நம்மோடு உள்ளது போலவே நமக்கெல்லாம் தோன்றுகிறது. நல்லவர் என்றும் மறைவதில்லை என்பதற்கு இவரே சாட்சி.