சிவகளை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் உள்பட பழங்கால பொருட்களை வெளியே எடுக்கும் பணி தீவிரம்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 6 மாத காலமாக இந்த ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது.
ஆய்வுப்பணியில் சிவகளை பரம்பு பகுதி, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் 45 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாத இறுதியில் ஆய்வுப்பணிகள் நிறைவுபெறும் நிலையில் ஆவணப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் சிவகளை பரம்பு பகுதி, ஸ்ரீமூலக்கரை மற்றும் பேட்மாநகரம் பகுதி பரம்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே உள்ள பழங்கால பொருட்களை எடுக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முதுமக்கள் தாழிகளிலும் சிறு பானைகள், கலயங்கள், கலயங்கள் வைக்க பயன்படுத்தப்படும் ஸ்டாண்டுகள் என ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. மேலும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்புசிவப்பு நிற சிறு பானைகள் கிடைக்கின்றன என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.