ஐரோப்பாவில் அமைந்துள்ளது போல உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம்
ஆதிச்சநல்லூரில் அமைகிறது என மத்திய தொல்லியல் தென்மண்டல இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆதிச்சநல்லூருக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குத் தீர்ப்பின் படி படிப்படியாக ஆதிச்சநல்லூரில் பணி மும்முரமாக நடந்துவருகிறது. 2020 மத்திய பட்ஜெட்டில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நிதி ஒதுக்கீடு செய்தார். மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் படி புதிதாகத் திருச்சியில் தொல்லியல் துறைக்கு மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. அதற்கு முதல் கண்காணிப்பாளராக அருண் ராஜ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு ஆதிச்சநல்லூர் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. இவர் கடந்த டிசம்பர் 11 ந்தேதி ஆதிச்சநல்லூர் வந்து புதிய உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்தார். அந்த இடங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஆய்வு செய்யக் கடந்த டிசம்பர் 26 ந்தேதி மீண்டும் ஆதிச்சநல்லூருக்கு இவர் தலைமையில் குழு வந்தது. ஏற்கனவே தேர்வு செய்த இடங்களைப் பார்வையிட்டனர். அதன் பின் 2004ல் அகழாய்வு நடந்த இடம், மற்றும் ஆதிச்சநல்லூரில் பாறை கிண்ணங்கள் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். அருங்காட்சியகம் அமையும் இடம் குறித்து ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபால கிருஷ்ணனோடு கலந்து ஆலோசித்தார்.
அதன் பின் ட்ரோவுன் காமரா மூலம் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் தற்காலிகமாக அருங்காட்சியகம் அமைக்கும் பணியை முடுக்கி விட்டார். ஆதிச்சநல்லூரில் மிகப் பிரமாண்டமாக விளம்பரப் பலகை மூன்று அமைக்கப்பட்டது. சுற்றுலாத் துறையுடன் ஆலோசனை நடத்தியதில் பேரில் சாலைகளில் ஆதிச்சநல்லூர் செல்லும் வழிகள் குறித்து விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. மிக வேகமாக பணிகள் நடந்த காரணத்தினால் தொல்லியல் ஆர்வலர்கள் மிகவும் சந்தோசமடைந்தனர்.
இதற்கிடையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த பணிகள் முடங்கியது. இதனால் பணிகள் தொய்வு பெற்றது. ஆயினும் மாநில அரசு சார்பாக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வு நடந்தது. கடந்த பிப்ரவரி 26 ல் தொடங்கிய இந்த பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடங்களைக் கண்டு பிடித்தது, சிவகளை அருகே உள்ள மூலக்கரையில் கல்வட்டம் கண்டுபிடித்தது, கொற்கையில் சங்கருக்கும் தொழில் சாலை கண்டுபிடிக்கப்பட்டது உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இதனால் தொல்லியல் மூலம் தமிழக வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்பு கோலோச்சியது தெரிய வந்தது. மேலும் கடந்த ஆண்டு ஆதிச்சநல்லூர் சிவகளையில் மாநில அரசு செய்த ஆய்வின் அறிக்கை வரும் போது தமிழரின் பண்பாடு பல ஆயிரம் ஆண்டு முன்பே உச்சத்திலிருந்தது தெரியவரும் என ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையில் மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி தலைமையில் மத்திய தொல்லியல் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் பணி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தார். அவர் கொற்கை, சிவைகளைப் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார். அதன் பின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையும் இடத்தினை பார்வையிட்டார். அவர் கூறும் போது, ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகம் உலக தரவாய்ந்த அருங்காட்சியமாக அமையும். இதை சைட் மியுசியம் என்று கூறுவர் . ஐரோப்பாவில் அமைந்த அருங்காட்சியகம் போலவே அகழாய்வு நடக்கும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு, அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியைப் பார்வையிடும் வண்ணம் வடிவமைக்கப்படும். மேலும் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருள்களையும் இங்கே உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த ஆவண செய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல் ஜெர்மன் நாட்டு பெர்லின் நகரில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டெடுத்து அதையையும் ஆதிச்சநல்லூரில் உள்ள அருங்காட்சியகத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது தேர்வு செய்யப்பட்ட இடத்தினை என்னுடைய உயர் அதிகாரிகள் பார்வையிட்டுச் சீர்செய்தவுடன் அருங்காட்சியகம் பணி மத்திய அரசின் ஒப்புதலுடன் துவங்கும் என்று அவர் கூறினார்.
அருங்காட்சியகம் அமைக்கும் இடத்தில் இடங்களைத் தேர்வு செய்யும் பணியை மத்திய தொல்லியல் துறை அதிகாரி மகேஸ்வரி, ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனோடு ஆலோசனை நடத்தினார். அவரிடம் தேவையான இடங்கள் குறித்து விவாதித்தார். மிக விரைவாக இடங்களை கையகப்படுத்து தர ஆவண செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பின் ஆதிச்சநல்லூர் ஊருக்குள் மாநில அரசு மூலமாக ஆய்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டார். மாநில அரசு அதிகாரிகளுக்கு ஆய்வு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் கூறும் போது ஆதிச்சநல்லூர் இந்தியத் தொல்லியல் துறையில் மிகவும் முக்கிய மான இடம். இவ்விடம் உலக அளவில் மிகப்பெரிய இடுகாட்டைக் கொண்டது. இங்குள்ள மக்கள் வாழ்விடத்தினை தேடும் பணியில் தற்போது மாநில ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அந்த ஆய்வில் முதல் கட்டமாக மக்கள் வாழ்விடத்தினை கண்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து தற்போது நடைபெறும் ஆய்வில் மேலும் பல அபூர்வ தகவல்களைக் கண்டு பிடித்து வருகின்றனர். என்று அவர் கூறினார்.
கார் சாகுபடிக்குத் தாமிரபரணி பாசனத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தினால் தற்போது ஆதிச்சநல்லூரில் உள்ள குழி தோண்டிய இடங்களில் தண்ணீர் வந்து விட்டது. எனவே ஆய்வுப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அவ்விடங்களையும் பார்வையிட்டார்.
அவருடன் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ், உதவி கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன், திருச்சி பராமரிப்பு அலுவலர் சங்கர், நாகர் கோயில் பராமரிப்பாளர் சுரேஷ் பாபு, திருமயம் பராமரிப்பாளர் விக்னேஷ், ஆய்வாளர் எத்திஸ்குமார், ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் கணேஷ், உள்படப் பலர் வந்திருந்தனர்.
மத்திய தொல்லியல் துறை தொடர்ந்து ஆதிச்சநல்லூருக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.


