தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனம் பெறும் குளங்கள் அனைத்தும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்ல நாட்டில் உள்ள திருமூல நாதர் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் 108 மரங்கள் நடும் விழாவைத் தொடங்கி வைக்கத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் வருகை தந்தார். அவருடன் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் வந்தனர்.
பின்னர் திருமூல நாதர் கோவில் முன்பு 27 நட்சத்திரங்களுக்கான 108 மரங்களை நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மேலும் கோவில் இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி நதியைச் சுத்தம் செய்து மரக்கன்று நட்டுத் தரவேண்டும் என்று மனுவை அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட அவர் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பதாவது.
வல்ல நாடு திருமூல நாதர் ஆலயத்தில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் நிலத்தினை 108 மரங்கள் நட்டு சோலைவனமாக கோயில் நந்தவனத்தினை உருவாக்க முயற்சி நடக்கிறது. அதற்கான முதல்கட்டமாக 27 மரங்களை நட்டு பணியைத் துவக்கி வைத்துள்ளோம். தாமிரபரணி நதியைப்பொறுத்தவரைத் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீ வைகுண்டம் வடகால் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தாமிரபரணி நதி அனைத்து மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த 53 குளங்களையும் தூர்வாரி, மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக கிழ ஆத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் பணிகள் நடந்துவருகிறது. அதில் எடுக்கப்படும் ஆகாயத்தாமரையை வீணாக்காமல் அதனை மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்றுவது குறித்து ஆராய்ந்து நபார்டு வங்கியின் உதவியுடன் ஆகாயத்தாமரையிலிருந்து நார்களில் மேட, பர்னிச்சர் போன்ற பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளைத் துவக்கி வைத்துள்ளோம். மேலும் தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணிகள் படிப்படியாக நடைபெறும். குலசேகரப்பட்டிணம் ராக்கெட் ஏவுதளப்பணிகளை பொறுத்தவரை மாதவன்குறிச்சி கிராமத்தில் 2500 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை 8 பகுதிகளாகப் பிரித்து நிலத்தைக் கையகப்படுத்தும் பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் கூடல் நகர் என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் அமைந்துள்ள 37 கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர் பேசினார்.
முன்னதாக வல்ல நாடு திருமூல நாதர் ஆலயத்துக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை திருமூல நாதர் பக்தர் பேரவை, வடவல்லநாடு பஞ்சாயத்து நிர்வாகம், ராஜா குளம் விவசாய சங்கத்தினர், சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் திருவை குண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன், இந்த சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோசரி சமந்தா, கோயில் தக்கார் நம்பி ராஜன், பாரதி மழலையர் பள்ளி தாளாளர் சங்கர லிங்கம், வடவல்லநாடு பஞ்சாயத்துத் தலைவர் பேபி சங்கர், கிராம நிர்வாக அதிகாரி அழகர், வருவாய் ஆய்வாளர் மாசன மணி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வல்ல நாடு பஞ்சாயத்துத் தலைவர் சந்திரா முருகன், தங்கம் பரமசிவன், சமூக சேவகர் நல்லமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் பாக்கிய லீலா கூடுதல் ஆணையாளர் செல்வி, பிள்ளமுத்து உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


