முறப்பநாடு அருகே பெண் கொலை வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைகுட்பட்ட வடவல்லநாடு விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மூக்கம்மாள் (51) என்பவரை 23.04.2018 அன்றிலிருந்து காணவில்லை என அவரது கணவர் 24.04.2018 அன்று அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார தேடி வந்தனர். இந்நிலையில் மேற்படி மூக்கம்மாள் 25.04.2018 அன்று சேதுராமலிங்கபுரம் காட்டுபகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், கொலை செய்தது யார் எனவும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், நீண்ட நாட்களாக துப்பு துலங்காமல் உள்ள கொலை வழக்கை கண்டுபிடித்து, எதிரியை கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் தலைமைகாவலர் சுந்தரராஜன், முதல் நிலை காவலர்கள் சதீஷ்தணிகைராஜா, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வல்லநாடு சின்னகலியாவூர் பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் பெருமாள் (60) என்பவருக்கும், கொலையுண்ட மூக்கம்மாளுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது, ஆகவே தனிப்படையினர் மேற்படி எதிரி பெருமாளை கைது செய்தனர். 3 வருடங்களாக துப்பு துலங்காமல் இருந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்த மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


