இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்கப்படவேண்டும்-
என்ற நீண்ட கால குரலுக்கு –
பொருநை நெல்மணி அடித்தளமிட்டுள்ளது-
பொருநை என்பது பெயர்ச்சொல்லாகும்
பொருள்: பொருநையாறு அல்லது தாமிரபரணி ஆறு . ‘தன் பொருநை’ என்றும் ஆன் பொருநை ஆறு என்றும் இந்த ஆற்றினை அழைப்பதுண்டு.
சேர வம்சத்து இளவரசனை பொருநைத்துறைவன் என்று அழைப்பதுண்டு.
பொருநன் | அகராதி | Tamil Dictionary
பொருநன் என்ற சொல்லுக்கு 1. வீரன் என்பது பொருள் பாலறி மரபிற் பொருநர்கண்ணும் (தொல்காப்பியம். பொருளதிகாரம். 74); 2. திண்ணியன் (பிங்கலநிகண்டு); 3. அரசன் என்றும் பொருள். அறந்துஞ் சுறந்தைப் பொருநனை (புறநானூறு .58); 4. குறுநிலத்தலைவன் (பிங்கலநிகண்டு); 5. படைத்தலைவன்; 6. உவமையாகக் காட்டப்படுவோன் போர்மிகு பொருந (திருமுருகாற்றுப்படை. 276); 7. பகைவன், பொருநரைப் பொறா. . . பஞ்சவ ரேறே (புறநானூறு. 58); 8. பொருந – ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனுஞ் சென்றுபாடுங் கூத்தன்.(தொல்காப்பியம். பொருளதிகாரம். 91, உரை.)
சங்க காலத்தில், பல போர்கள் நடைபெற்றுள்ளனன. அவற்றுள் தலையாலங்கானத்துப் போர் மிகப் பெரியது. தலையாலங்கானம் என்ற இடத்தில் நிகழ்ந்ததால், தலையாலங்கானத்துப் போர் என்று பெயர் பெற்றது.
சிறுவனான பாண்டியன் நெடுஞ்செழியனை வென்று, பாண்டிய நாட்டைப் பங்கு போட்டுக் கொள்வது என்று, சேர அரசன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், சோழ அரசன் கிள்ளிவளவனும் திட்டம் தீட்டினர். தங்களுடன் திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐந்து வேளிர் மன்னர்களை கூட்டுச் சேர்த்துக் கொண்டனர். பாண்டிய நாட்டுப் படை, இந்த ஏழு அரசர்களையும் வென்று அவர்களுடைய வெண்கொற்றக் குடையைக் கைப்பற்றியது. எனவே பொருநன் ஐந்து வேளிர் அரசர்களுள் ஒருவனாவான் என்று உறுதியாகிறது. இவன் இயல்தேர் பொருநன் (அகநானூறு 36) என்று அகநானூற்றுப் பாடல் ஒன்றில் போற்றப்படுகிறான்.
சேரல், செம்பியன், சினம் கெழுதிதயன்
போர்வல் யானைப் பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று
எழுவர் … … ….. ….. ……. (அகநானூறு 36)
“………………… பரப்பிற்
பல்மீன் கொள்பவர் முகந்த விப்பி
நாரரிநறவின் மகிழ் நொடைக்கூட்டும்
பேரிசைக் கொற்கைப் பொருநன் வேண்வேல்
கடும்பகட்டியானை நெடுந்தேர்ச் செழியன்
மலைபுரை நெடுநகர் கூடல் நீடிய மனிதரு கம்பலை போல
அலராகின்றது பலர் வாய்ப்பட்டே” (அகநானூறு 296)
இப்பாடலில் பேரிசைக் கொற்கைப் பொருநன்.. நெடுந்தேர்ச் செழியன் என்று பாண்டியன் போற்றப்படுகிறான்.
கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகிய நான்கு வகை கலைஞர்கள் சங்ககாலத்தில் நிகழ்த்திய கூத்துக்களில் நேரடியாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையிலோ தொடர்பு கொண்டிருந்தனர். முழவு இசையில் கூத்து நிகழ்த்தியோர் கூத்தர் ஆவர். யாழ் இசைத்துப் பாடிஆடி நாடகம் ஆடியோர் பாணர் ஆவர். கிணை என்னும் கருவியை இயக்கியவாறு பாடியோர் பொருநர் ஆவர். பாணர் மற்றும் விறலியர் ஆகியோரை ஒரு குழுவாக இணைத்து இக்குழுவிற்குத் தலைமையேற்று நடத்தியவர் -பொருநர் ஆவர். பொருநர்களில் ஏர்க் களம் பாடும் பொருநர். போர்க்களம் பாடும் பொருநர், பரணி பாடும் பொருநர் என மூன்று பிரிவினர்கள் இருந்துள்ளனர்.
ஆற்றுப்படுத்துதல் என்றால் வறுமைச் சூழலில் உள்ள கலைஞர்களான கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியோரை வழிப்படுத்துதல் என்று பொருள் கொள்கிறார்கள். இக்கலைஞர்கள் தங்கள் வறுமை நீங்க சங்ககால வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது மரபு. இவ்வாறு ஒரு வள்ளளிடம் பொருள் பெற்றுத் திரும்பும் கலைஞர்கள் வறுமையில் வாடும் மற்றோரு கலைஞர் குழுவினை தாங்கள் பெற்றது போன்றே பொன்னும் பொருளும் பெரும் வகையில் வள்ளல் ஒருவரிடம் செல்வதற்கு வழிப்படுத்துதல் ஆகும். வழிப்படுத்துதல் என்றால் வள்ளளின் புகழ், கொடைத்திறன், செல்லும் வழி, நில அமைப்பியல் (Topography), இயற்கை, விலங்குகள், மக்கள் உறைவிடங்கள் பற்றியெல்லாம் கூறி வழிப்படுத்துவதே ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் வரையறுகிறது.
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு என்னும் தொகை நூலில் இரண்டாவதாக இடம் பெறுவது பொருநர் ஆற்றுப்படைஆகும்.. கரிகாற் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவர், எதிரே வந்த வறுமையால் வாடும் வேறு ஒரு பொருநனைப் பார்த்து நீயும் கரிகால் வளத்தானை அடைந்தால் பரிசுகளைப் பெற்று வருவாய்’ என்று முடத்தாமக்கண்ணியார் இயற்றிய பொருநர் ஆற்றுப்படை வழிப் படுத்துகிறது.
நன்றி-முத்துசாமி இராமையா அவர்கள்


