சுமார் 35 வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் என்னோடு போட்டி எழுத்தாளராக அறிமுகமானவர் சரலூர் ஜெகன். வாரந்தோறும் அவருடைய துணுக்கு இல்லாமல் இதழ் வெளிவராது. புதிய புதிய செய்திகளைத் தொகுத்து வழங்குவார். ஆனாலும் நாங்கள் நேரில் பார்த்தது கிடையாது. இதற்கிடையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தம்பி ராம் தங்கத்தின் ஊர் சுற்றிப்பறவை வெளியிடச் சென்றேன். அப்போது நாகர்கோவிலில் உள்ள நண்பர்கள் வரிசையில் சரலூர் ஜெகனை பற்றிப் பேசினேன். அப்போது அவர் அந்த மேடை முன்பு தான் அமர்ந்திருந்தார். இருவரும் சந்தித்துக் கொண்டோம். மிகச்சந்தோஷமான நாள். அதன் பிறகு தான் அவரை பற்றி அறிந்தேன். மிகப்பெரிய சமூக சேவகராக அவர் உயர்ந்திருந்தார். குருதி கொடை வள்ளல்,சமூக சேவகர்,தூய்மை காவலர், கொரோனா காலத்தில் அளப்பரிய தொண்டாற்றி ஓடி ஒடி உழைத்தது . சப்பட்டை என்ற நாகர் கோயில் கன்னித் தமிழில் நாவல் எழுதியது என மிகப் பிரமாண்டமான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். வானொலி , மரக்கன்று நடும் சேவகம். பள்ளி கல்லூரில் சென்று மாணவ மாணவிகளுக்கு தன்னப்பிக்கை பேச்சு என மிகப்பெரிய பேராசிரியர்கள், வசதி படைத்தவர்கள் செய்யும் வேலைகளைத் தனது ஏழ்மை நிலையிலும் அயராது செய்துக் கொண்டிருந்தார். நண்பருக்கு தமிழக அரசு தற்போது தமிழ் அறிஞர் பட்டம் கொடுத்துள்ளது. ஓய்வூதியம் வழங்கவும் ஆவண செய்துவருகிறது. விருதுகளை 100 மேல் குவித்து விட்டார். ஆனாலும் தலைக்கனமே இல்லாமல் நான் செல்லும் விழாக்கள் அனைத்திலும் பார்வையாளராக வந்து அமர்ந்து என்னை ஊருக்கு வழி அனுப்பி வைத்து விட்டுத்தான் செல்வார். கன்னியாகுமரி மாவட்டத்தில் என் மரியாதைக்குரிய நண்பர். இவர் மிகப்பெரிய சினிமா திரைக்கதை ஆசிரியராக வரவேண்டும் என்பது தான் என் ஆசை. நிச்சயம் ஒரு நாள் நடைபெறும். என் நண்பர் சரலூர் ஜெகன் உலகப் புகழ் பெறுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


