தினகரனின் தொடர்ந்து 35 வருட காலமாக செய்துங்கநல்லூரில் பகுதி நேர நிருபராக பணியாற்றி வந்தேன். அதோடு மட்டுமல்லாமல் நெல்லை தமிழ் முரசு செய்தி ஆசிரியர் நெல்லை வரதன் மூலமாகத் தாமிரபரணியைப் பற்றி 5 வருடமாகத் தொடர் எழுதி வருகிறேன். நான் எழுதிய “கொன்றால்தான் விடியும்”, “வல்ல நாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்” மிகவும் பிரபலமடைந்தது. இதற்கிடையில் திரு.கே.பி.கே. குமரன் அய்யா நடத்தி வந்த தினகரன் சன் குழுமம் வாங்கிக் கொண்டது. இதனால் நெல்லையில் எந்த கட்டுரையும் எழுத இயல வில்லை. 1 வருடம் கண்ணைக் கட்டி காட்டி விட்ட மாதிரி இருந்தது. ஆனாலும் என் ஆவல் என்னை விடவில்லை. அப்போதைய நெல்லை ஆசிரியராக இருந்த பாலவிநாயகம் அய்யா மூலமாக நான் எழுதிய கருங்குளம் வெங்கிடலாசபதி திருக்கோவில் கட்டுரை சென்னைக்குச் சென்றது. அந்த கட்டுரையைப் பார்த்துவிட்டு ஆன்மிக உதவி ஆசிரியர் கிருஷ்ணா அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் என்னிடம் சில ஆலோசனைகளைக் கூறினார். அதன் பின் ஆசிரியர் பிரபு சங்கர் அய்யாவிடம் என்னை அறிமுகப் படுத்தி வைத்தார். அவர்கள் இருவரும் கொடுத்த ஊக்கம் தினகரனில் தொடர்ந்து ஆன்மிக கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அந்த கட்டுரைகள் தமிழகம் முழுவதும் வெளியானது. எனக்கு நல்லபெயர் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் சதுரகிரி யாத்திரை என்ற தொடரைக் கிருஷ்ணா அவர்கள் எழுதினார்கள். அதைத் தொடர்ந்து அத்ரிமலை யாத்திரை தொடர் எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் என்னை மெருகேற்றி , ஒவ்வொரு பகுதியையும் சிறப்பாக வெளியிட்டார் கிருஷ்ணா. அதோடு மட்டுமல்லாமல் நண்பர் புகைப்பட கலைஞர் பரமகுமார் படங்கள் அனைத்தும் அந்த தொடரில் மின்னியது. இந்த தொடர் மிகவும் பிரபலமடைந்தது. இதன் மூலமாக தோரணமலைக்கு பல ஆயிரம் பக்தர்கள் கூடினார்கள் என்றால் மிகையாகாது. கிருஷ்ணா அவர்கள் தற்போது தினகரன் ஆன்மிக மலருக்கு ஆசிரியர். இவரின் மற்றுமொரு சிறப்பு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் சீடர் என்பது. இவர் சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர் என்பது கூடுதல் சிறப்பு. என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் கூட எழுத்து பணியில் எனக்கு மைல் கல்லாக அமைந்தவர் கிருஷ்ணா என்றால் மிகையல்ல. நன்றி கிருஷ்ணா சார். தொடரட்டும் உங்கள் வெற்றி பணி. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


