தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர்.
இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: “கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.


