செய்துங்கநல்லூரில்
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் படி கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தின் மூலமாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதையொட்டி செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கோலப்போட்டி நடந்தது. தொடர்ந்து மனித சங்கிலி அமைந்து வாக்கு அளிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து விழிப்புணர்வு பேரணி கிளம்பியது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம வளர்ச்சி) ராஜ ஆறுமுகநயினார் முன்னிலையில் ஆணையாளர் சுடலை இந்த பேரணியை துவக்கிவைத்தார். பேரணியில் தமிழண்டா கலைக்குழுவின் சார்பில் பொய்கால் ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம் நடந்தது.அதன் பின் செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தில் வைத்து வாக்கு அளிப்பதின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரையை பஞ்சாயத்து எழுத்தர் பாலாஜி, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் ஆற்றினர். அதன்பின் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டப்பட்டது. பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர்.


