திருநெல்வேலி மாவட்டம் நம்பியாற்றங்கரையில்தான் இந்த அபூர்வ கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குப் பின்னால் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. பாண்டிய நாட்டுத் திருப்பதி என்று அழைக்கப்படும் திருக்குறுங்குடி நம்பி சுவாமி கோயில் என்னும் வைணவத் தலம்தான் இது.
இந்தத் தலம் நாங்குநேரி – களக்காடு மார்க்கத்தில், மகேந்திர மலைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் நம்பியாற்றங்கரையில் திருக்குறுங்குடி இருக்கிறது. இங்குள்ள ஆலயம் மிகவும் பெரியது, புராதனமானது. இத்தலத்தில் பெருமாள்: நின்ற நம்பி, இளநம்பி, கிடந்த நம்பி, குறுங்குடி நம்பி, மலைமேல் நம்பி என ஐந்து திருக் கோலங்களில் சேவை சாதிக்கிறார்.
முக்கியச் சாலையிலிருந்து (Main Road) உள்ளே நடக்கத் தொடங்கினால் இரண்டு நிமிடங்களில் கோயிலுக்குள் சென்றுவிடலாம். கோயிலைச் சுற்றி நான்கு ரத வீதிகள் உள்ளன. நுழைவாயில் கோபுரம் மொட்டைக் கோபுரமாகக் காட்சியளிக்கிறது. சுவர்களில் ஆழ்வார்களின் அணிவகுப்புச் சிற்பங்கள் உள்ளன. மேலிருக்கும் கூரையைச் சட்டங்கள் தாங்குவதைக் கூடச் சிற்பங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள்.
கோயிலில் வசந்த மண்டபம் உள்ளது. குதிரைகளும், யானைகளும், போர் வீரர்களும் நிற்கும் தோரணையில் நாயக்கர் காலக் கலைத்திறன் பளிச்சிடுகிறது. ராஜகோபுரத்தின் முதல் நிலையில் அழகான சிற்பங்கள் உள்ளன. வெயில் பட்டு அவை பளபளவென்று ஜொலிக்கின்றன. ராமர் பட்டாபிஷேகக் காட்சி மிக நுணுக்கமாக அரையடியில் சிற்பமாக உருப்பெற்றுள்ளது.
திருக்குறுங்குடி பரிபூரண வடிவழகிய நம்பி ‘நின்ற நம்பி’யாகக் காட்சி தருகிறார். அருகிலேயே கிடந்த நம்பி மற்றும் சீரங்கத்துத் தேவன் உள்ளனர். பக்கத்திலேயே கிருஷ்ண நம்பி ஒய்யாரமாக நிற்கிறார். நின்ற நம்பியை நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர் (புகழ்ந்து பாடியுள்ளனர்). சிறிய பிரகாரங்கள்தான் என்றாலும் ஏகப்பட்ட நம்பிகள்! துளசித் தீர்த்தமும் மஞ்சளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
பிரகாரத்தைச் சுற்றி வரும்போது இடது பக்கம் வந்தால் மகேந்திரகிரி நாதரைக் காணலாம். வைணவக் கோயிலில் சிவனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சிவனே நேரில் வந்து தரிசித்த பெருமாள் என்று ஆழ்வார் பாடலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாம். சைவக் கோயில்களில் பெருமாள் எழுந்தருளியிருப்பதும், வைணவக் கோயில்களில் சிவன் எழுந்தருளியிருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது. அதேபோல் வைணவத் தலமான இங்கு, உள்ளேயே சிவன் கோயிலும் பைரவர் சந்நிதியும் அமைந்திருப்பது ஒரு சிறந்த அம்சமாகும்.
இங்குள்ள பைரவர் மூச்சு விடுகிறார், உயிரோட்டமாக இருக்கிறார் என பக்தர்கள் நம்புகிறார்கள். இதற்கு உதாரணமாக, பைரவர் சுதைச் சிற்பத்தின் மூக்கின் அருகில் உள்ள விளக்கு மட்டும் அசைந்து கொண்டிருப்பதும், மற்ற இரண்டு விளக்குகள் அசையாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியமாகும்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இங்கு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் ‘பஞ்சகேத விமானம்’ ஆகும். மோட்சம் வேண்டி இங்குப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இது வாமனத் தலம் என்பதால் ‘திருக்குறுங்குடி’ என்ற பெயர் ஏற்பட்டது. வாமன நம்பியின் சந்நிதி திருப்பாற்கடல் என்ற ஆற்றங்கரையில் உள்ளது. இவரை ‘திருப்பாற்கடல் நம்பி’ என்று அழைக்கிறார்கள்.
திருமங்கை ஆழ்வாரைத் திருவரங்கநாதன் (ஸ்ரீரங்கநாதர்) இங்கு அனுப்பியதாகக் கூறுவர். ஆழ்வார் தன் அந்திமக் காலத்தை இந்தக் கோயிலில்தான் கழித்தாராம். உடையவர் (இராமானுஜர்) சந்நிதியும் இங்கே இருக்கிறது. மகேந்திர மலையின் மீது 9 கி.மீ. தூரம் சென்றால் மலைமேல் நம்பி ஆலயம் இருக்கிறது. இவர் ஸ்ரீநிவாசர். சனிக்கிழமை இவருக்கு உகந்த நாளாகும். அன்று பக்தர்கள் நூற்றுக் கணக்கில் வருவார்கள். காட்டுப் பிரதேசம் என்பதால் பகல் நேரத்திலேயே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
இது நம்மாழ்வார் அவதாரத்திற்குக் காரணமான தலம். ஆழ்வாருடைய பெற்றோர் மகப்பேறு வேண்டித் திருக்குறுங்குடிக்கு வந்து நம்பியை ஆராதித்தனர். அதன் பயனாகவே நம்மாழ்வார் அவதரித்தார்.
திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்தவர் நம்பாடுவான். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், கோயிலுக்குள் சென்று மூலவரான அழகிய நம்பியைப் பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்கச் சொல்லி, நம்பாடுவானுக்குத் தாமே தரிசனம் தந்தார். இதனாலேயே இன்றும் கொடிமரம் விலகி இருப்பதை நாம் காணலாம்.
கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும்போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்துவிட்டதா என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் பட்டரிடம் “அன்பர்க்குக் குறை ஏதும் உண்டா?” என்று கேட்கப்படும். அதற்கு “குறை ஒன்றும் இல்லை” எனப் பதில் வரும். இந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தில்தான்.
நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இங்குள்ள கோயில்களில் காட்சி தருகிறார். ‘குரங்கம்’ என்றால் பூமி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இதற்கு ‘குரங்க க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு.
நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல் ஆகும். வராக அவதாரம் எடுத்த திருமால், தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கித் தனது பயங்கர வராக உருவத்தைக் குறுக்கிக் கொண்டமையால் இத்தலம் ‘குறுங்குடி’ ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்தபோது, தனது திருவடிச் சதங்கையிலிருந்து உருவான ‘சிலம்பாறு’ இங்குத் தோன்றியதாகப் புராணம் கூறுகிறது.
ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியைக் கவர்ந்து செல்ல முயன்றபோது, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டாராம். அப்போது பூமித்தாய், ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வேண்ட, “இசையால் இறைவனை அடையலாம்” என்றார் வராக மூர்த்தி. இதன் பின்னணியில்தான் நம்பாடுவான் கதை அமைகிறது. ஒருமுறை பிரம்ம ராட்சதன் ஒருவன் நம்பாடுவானைப் பிடிக்க, “இன்று ஏகாதசி, நான் ‘கைசிகம்’ என்ற பண்ணில் (விருத்தத்தில்) பகவானைப் பாடிவிட்டு வருகிறேன், அதன் பின் நீ என்னை உண்ணலாம்” என்று கூறிச் சென்று பாடிவிட்டுத் திரும்புகிறார். அவரின் பக்தியைக் கண்டு பூதம் மனம் மாறியதுடன், அந்தப் பாடலைக் கேட்டதால் அச்சாபம் நீங்கி மோட்சம் பெற்றது.
இந்தக் கதை ‘கைசிக நாடகமாக’ இன்றும் நடைபெற்று வருகிறது. இது மனித நேயத்தின் மேன்மையையும், சாதி இன வேறுபாடு கடந்து தூய்மையான பக்தியின் உன்னதத்தையும் பறைசாற்றுகிறது. 13-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த நாடகம் மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது.
பண்டையக் கோயில் சமூகங்களின் வழிபாட்டு முறையில் பாட்டும், கூத்தும் சிறப்பிடம் பெற்றிருந்ததை இதிலிருந்து உணரலாம். இந்த நாடகத்தில் உள்ள சாய்ந்த கொண்டை மற்றும் அசுர உடலலங்காரங்களில் கேரளப் பாரம்பரியத்தின் தாக்கம் உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இந்த ஊர் இருந்ததே இதற்குப் பின்னணியாகும்.
திருக்குறுங்குடி கோயிலில் கார்த்திகை மாத ஏகாதசி தினத்தன்று இரவு, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 5 மணி நேர நாட்டிய நாடகம், காலப்போக்கில் போதிய ஆதரவின்றி 50 ஆண்டுகளுக்கு முன் வழக்கொழிந்தது.
பத்து ஆண்டுகளுக்கு முன், முனைவர் ராமானுஜம், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி மற்றும் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர் அனிதா ரத்னம் ஆகியோரின் பெரும் முயற்சியால் இக்கலை வடிவம் மீண்டும் புத்துயிர் பெற்றது. கிராமத்து முதியவர்களிடம் பேசி, பழைய ஓலைக்குறிப்புகளைத் தேடி, கோயில் சிற்பங்களை ஆய்வு செய்து, இந்த மறு கலை வடிவத்தை அவர்கள் உருவாக்கினர். இது நமது பாரம்பரியத்திற்கு அவர்கள் செய்த மிகப்பெரியத் தொண்டு.
நெல்லை நால்வர்
சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை பாண்டிய நாடும், அதன் தலைநகர் மதுரையும் ஏராளமான புலவர்களைப் பெற்றுள்ளன. முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற மூன்று சங்கங்களைக் கொண்ட பெருமை மதுரைக்கு உண்டு. இதில் முதல் சங்கம் கொற்கையை உள்ளடக்கிய பண்டைய பாண்டிய நாட்டைச் சார்ந்தது. ‘சங்கம்’ என்பதற்கு ‘கூட்டம்’ அல்லது ‘கற்றோர் குழு’ என்று பொருள். திருவள்ளுவர், நாலடியார் போன்றோர் கடைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
நெல்லைச் சீமையைப் பற்றிப் பேசும்போது இத்தகவல்கள் தேவைப்படாது என்றாலும், இவற்றைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. சங்கப் புலவர்களுக்கு முன்னோடியாகவும், தமிழுக்கு முதல் இலக்கணம் அளித்தவராகவும் கருதப்படும் அகத்திய முனிவர் வாழ்ந்தது நெல்லைச் சீமையின் பொதிகை மலையில்தான். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர், அகத்தியரின் மாணவர்தான். ‘தென்முனி’ என்று அழைக்கப்படும் அகத்தியர் இலக்கணம் மட்டுமல்லாமல் ரசவாதமும் எழுதினார் என்பர். அகத்தியருக்குப் பின்னர் பிற்காலம் வரையில் நெல்லைச் சீமையில் பல இலக்கிய ஆளுமைகள் தோன்றியிருந்தாலும், சிறப்பான இடம் பெறும் வகையில் நால்வர் இருந்துள்ளனர்.
(நதி வற்றாமல் ஓடும்…)


