019 பகுதி நேர நிருபர்களையும் ஊக்குவிக்கும் பத்திரிக்கை ஆசிரியர் மாயாவரதன்
பெரும்பாலுமே தினசரி பத்திரிக்கையில் முழுநேர நிருபர்கள் , பகுதி நேர நிருபர்கள் என இரு பிரிவினர் உண்டு. முழுநேர நிருபர்கள் கட்டுரைகளை எழுதுவார்கள் அவர்கள் பெயருடன் பிரசுரம் ஆகும். பகுதி நேர நிருபர்கள் முக்கியச் செய்திகள் இருந்தால் மட்டுமே வெளியே தெரிவார்கள். ஆனாலும் அவர்கள் பெயர் வெளியே வராது. ஆனால் தற்போது மதுரை இந்து பத்திரிக்கை ஆசிரியராக பணிபுரியும் மாயாவரதன் அய்யா அவர்கள் கிராமப்புறத்தில் எழுதும் பகுதி நேர நிருபர்களைக் கூட தட்டிக் கொடுப்பவர். நான் எழுத்தாளராக ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்கிறேன். நெல்லை தினகரனில் அவர் ஆசிரியராக இருக்கிறார். எனது கட்டுரை தினகரன் ஆன்மிக மலரில் வருகிறது. பெரும் பாலும் நான் ஆசிரியர் கட்டுபாட்டுக்குள் இருப்பதால் என் கட்டுரையை நெல்லைக்கு அனுப்பி அதன் பிறகே சென்னை அனுப்புவார்கள். ஆனால் எனக்குச் சுதந்திரம் தந்து நேரடியாக சென்னைக்கு அனுப்புங்கள் என உற்சாகப் படுத்தினார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஒரு கால கட்டத்தில் செய்திப் பிரிவில் நான் பணியாற்றும் செய்துங்கநல்லூர் கிராமத்தில் விளம்பர பாக்கி அதிகமாகி பலரும் தராமல் போய் விட்ட காரணத்தினால் செய்தி எழுதுவதில் ஆர்வம் குறைந்தது. செய்தியாளர் பதவியை விட்டு விடலாம் என எண்ணினேன். ஆனால் எங்கள் ஆசிரியர் என்னை அழைத்து ஒரு நாளைக்கு மூன்று செய்தி உன்னால் முடியும் தைரியமாக எழுது. என்றார்கள்.அதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளர் என்ற முறையில் நான் பங்கேற்கும் விழா நிகழ்ச்சிகளை என் படத்துடன் வெளியிட்டு ஊக்கமளித்தார்கள். இன்று நான் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்று முழுநேர எழுத்தாளராகி விட்டேன். அன்று அவர் என்னை உற்சாகப் படுத்தாவிடில் ஒரு வேளை எழுத்து துறையிலிருந்து கூட வெளியேறியிருப்பேன். உரியக் காலத்தில் உற்சாகம் மூட்டிய எங்கள் செய்தி ஆசிரியர் மாயாவரதன் அவர்களுக்கு நன்றி. அய்யா என்னைப் போலப் பல பகுதிநேர எழுத்தாளர்களையும், ஆர்வமுள்ள புகைப்பட கலைஞர், நிருபர்களையும் உற்சாகப் படுத்தியவர் என்று கூறினால் மிகையாகாது. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


