தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 122 பேருக்குக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, ஒட்டப்பிடாரம் வேலைவாய்ப்பு முகாம் – 2026 ‘வெற்றிப்படி – வேலைவாய்ப்பிற்கான வெற்றிப் பாதை’ திட்டத்தின் கீழ் இம்முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (Startup TN), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TN Skill) மற்றும் அஸ்கார்டியா ஃபவுண்டேஷன் (ASGARDIA Foundation) ஆகியவை இணைந்து புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்தின.
இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட பிரபலத் தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் மொத்தம் 602 இளைஞர்கள் கலந்துகொண்ட நிலையில், 122 நபர்கள் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.மதன் ராஜா பேசியதாவது: “இளைஞர்கள் இதுபோன்று அரசு மற்றும் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் பெருமளவில் கலந்துகொண்டு, தங்களுக்கான வேலைவாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும்.” என்றார்.


