018. மரக்கன்றுகளை தன்குழந்தைபோல பராமரிக்கும் சுமு முருகன்
தமிழகத்தில் மரங்களை நடுகிறோம் எனப் பலரும் தொண்டுள்ளதோடு பணிபுரிந்து வருகிறார்கள். அனைவரையும் பாராட்ட வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து கடந்த 5 வருட காலமாகப் பனை மர விதைகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விதைத்து வருபவர் சுமு முருகன். இவர் வண்ணம்பூசுநர் ஊர் ஊராகச் சென்று விளம்பரங்கள் சுவரில் வரைபவர். அங்கெல்லாம் பனை மர விதைகளை விதைத்து வரும் பண்பாளர். வருடம் தோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடைப் பயணமாகச் சென்று முருகனைத் தரிசனம் செய்பவர். அந்த சமயத்தில் கூட சாலை ஓரங்களில் பனை விதைகள் விதைத்தபடியே செல்வார். அதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருடம் பயணமாகச் செல்லும் போது அதில் எத்தனை மரங்கள் வளர்ந்திருக்கிறது எனத் தேடி அதையும் முகநூலில் பதிவு செய்வார். பனை விதை சேகரிப்பு, பனை விதை நடுதல், பனை சம்பந்தப்பட்ட பணிகள் எனத் தொடர்ந்து பணி புரியும் சுமு முருகன் மிகப்பெரிய பனைக்காவலன். இவரோடு நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன், இவரைப்போன்ற பல்வேறு பனை நேசர்கள் இருப்பதால் தான் தற்போது அரசு பனை மரத்தினை வெட்டத் தடையும், பனை மர விதையை விதைக்க ஆர்வத்தினையும் தூண்டியுள்ளது என்று கூறினால் மிகையாகாது. இவரை அழைத்து தோரண மலை முருகன் கோயிலில் வைத்து திரைப்பட இயக்குனர் அன்பழகன் கரத்தினால் கோயில் தர்மகர்த்தா செண்பக ராமன் தலைமையில் விருது கொடுத்து மகிழ்ந்தோம். தொடரட்டும் உங்கள் பணி.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


