நான் சிறுவயதில் பிறந்து வளர்ந்தது காங்கிரஸ்காரர்கள் வீட்டில். சிறுவயதில் என் தந்தை என்னை காமராஜரைப் பார்க்கச் செய்துங்கநல்லூருக்கு அழைத்துச் சென்றார். அவரிடம், “உங்கள் பெயரைத்தான் இவனுக்கு வைத்திருக்கிறேன்” என்றார். “பெயர் வைத்தால் மட்டும் போதாது; சாதித்துக் காட்ட வேண்டும்” என்றார் பெருந்தலைவர். பல முயற்சிகள் செய்து என்னால் முடிந்த வளர்ச்சியைக் கண்டுள்ளேன்.
சிறுவயதில் நான் பேச்சாளனாக மாறக் காரணம் காமராஜர்தான். அரசர்குளம், கிளாக்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாக்களில் காமராஜர் குறித்துப் பேசினேன். நான் வானொலியில் (ரேடியோவில்) அறிமுகமாகி ஆற்றிய முதல் உரையே “குருவை மிஞ்சிய சீடர்” என்ற தலைப்பில் காமராஜரைப் பற்றிப் பேசிய பேச்சுத்தான்.
நிறைய பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழாக்களில் பேசியுள்ளேன்; நாளிதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால், நெல்லை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கெல்லாம் நான் வந்ததில்லை. எனக்கு 60 வயதாகிவிட்டது; இப்போது நான் நெல்லையில் ஓரளவு பிரபலமாகிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.
ஒருநாள் நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்புக் குழுத் தலைவர் வித்யாகண்ணன், செயலாளர் ஆரைக்குளம் ரஞ்சித் நாடார், பொருளாளர் ரெட்டியார்பட்டி நளன் ஆகியோர் என்னை “நிகழ்ச்சிக்கு வாருங்கள்” என அழைப்பிதழ் கொடுத்தார்கள். நானும் மகிழ்ச்சியாகப் பிறந்த நாளன்று நெல்லை சந்திப்பிற்குச் சென்றுவிட்டேன். என்னை அழைத்துச் சென்று மேடையில் அமரவைத்து கௌரவித்தார்கள்.
இதே நேரத்தில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) நயினார் நாகேந்திரன் / ஆர்.எஸ்.முருகன் அவர்களும் வந்தார். காமராஜருக்கு மாலை அணிவித்துவிட்டு மேடைக்கு வந்த அவரிடம், விழாக்குழுவினர் “தாமிரபரணியில் ₹59 கோடியை வீணாகச் செலவழிக்கும் மாநகராட்சியின் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என எனது சார்பிலான கோரிக்கையை வைத்தார்கள். அவரும் “சரி” எனக் கூறிச் சென்றார்.
மொத்தத்தில் அவ்விடத்தில் என்னைப்போன்ற தாமிரபரணி ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையை மேடையில் வைத்த அன்புச் சகோதரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல் ஒவ்வொரு மேடையிலும் தாமிரபரணியின் குரல் ஒலிக்க வேண்டும்.
அழகான புகைப்படம் எடுத்துத் தந்த சான்றோர் மலர் மாரியப்பன், தம்பி செட்டிக்குளம் கவுன்சிலர் பாலையா, வழக்கறிஞர் சுதர்சன் உட்பட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு


