தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திற்கு மிக அருகே பேரூர் கிராமத்தில் அமைந்துள்ளது “தேசிய சுதந்திர செந்தி விநாயகர்” கோவில். இங்கு தான் சுதந்திர தின வழிபாடு ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது. இக்கோவிலை சுதந்திர போராட்ட தியாகி செந்தில்பெருமாள் 12.04.1948ம் ஆண்டு கட்டினார்.
பேரூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த செந்தில்பெருமாள் தேசத்தின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், பாரதியார், மகாத்மா காந்தி ஆகியோர் தீராத பற்றுக்கொண்டு அதன்பால் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இவரோடு மனைவி லட்சுமி அம்மாள், மைத்துனர் பால்பாண்டி ஆகியோரும் சுதந்திர பேரட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர போராட்ட வீரரான செந்தில்பெருமாள் அந்நியருக்கு எதிரான போராட்டம் குறித்த தகவல்களை இரவு நேரங்களில் கிராமம் கிராமமாக சென்று தண்டோரா போட்டு மக்களுக்கு தெரிவித்தார். இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி சுதந்திர உணர்வை ஊட்டினார்.
மகாத்மாகாந்தியின் அரிசன ஆலய பிரவேச போராட்டத்தினை தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி ஆலயங்களில் நடத்திக் காட்டினார். உப்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆறுமுகநேரியில் நடத்தி சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிய தியாகி செந்தில்பெருமாள் எந்தப்பணியையும் விநாயகரை வணங்கி விட்டே துவங்குவது தான் வழக்கமாக கொண்டிருந்தார். சுதந்திர போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தியாகி செந்தில்பெருமாள் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது இல்லத்திற்கு அருகிலேயே விநாயகர் கோவில் கட்டுவதற்கான பணிகளை துவங்கி மேற்கொண்டு வந்தார்.
இந்த நேரத்தில் நமக்கு ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் தியாகி செந்தில்பெருமாள் தான் கட்டிய விநாயகர் கோவிலுக்கு “தேசிய சுதந்திர செந்தி விநாயகர்” கோவில் என்று பெயர் சூட்டினார். கோவில் கோபுரத்தின் வலதுபக்கம் தேசதந்தை காந்தி, இராஜாஜி மற்றும் இடதுபக்கம் நேதாஜி, நேரு ஆகியோரின் சிலைகளை பதித்தார்.
தேசத்தலைவர்களின் சிலைகளுக்கு நடுவில் பாரதமாதாவின் சிலையை வைத்து வழிபட்டார். சுதந்திர தின நாளில் கோவிலில் தேசியக்கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கிய தியாகி செந்தில்பெருமாள் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களில் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்களிடம் எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டார்.
காந்தியடிகளின் ஆணைப்படி கடந்த 1940ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி சன்னதியில் சத்தியாகிரகம் செய்து ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் தண்டனை அனுபவித்தார். தனிப்பட்ட சட்டமறுப்பில் ஜில்லாவின் எட்டு தாலுக்காக்களுக்கும் பாதையாத்திரையாக நடந்தே சென்னை சென்றார். அங்கு கைதான அவர் பெல்லாரி, அலிப்புரம் ஜெயிலில் சிறை தண்டனையும் அனுபவித்தார்.
செந்தில்பெருமாள் வீட்டிலுள்ள பாத்திரங்கள் மற்றும் வீட்டை ஆங்கிலேய அரசின் போலிசார் அடித்து உடைத்து சேதப்படுத்தியபோதும் அவரின் தேசப்பற்று தீரவே இல்லை. இதனையெல்லாம் கண்டு மனம் கலங்காமல் தொடர்ந்து சுதந்திரப் பணியாற்றி செந்தில்பெருமாள் வீட்டிறகு மகாத்மாகாந்தியடிகள் நேரில் வந்து சென்றது வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும்.
சுதந்திர போராட்டத்தியாகி செந்தில்பெருமாள் ஸ்ரீவைகுண்டம் ஜல்லி போர்டு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை ஆதரித்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். தியாகி செந்தில்பெருமாள் விநாயகர் கோவிலில் துவங்கி வைத்த சுதந்திர தின வழிபாடும், சுதந்திர தின உரையாற்றுதலும் இன்றும் பாரம்பரியம் குறையாமல் மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது.
தற்போது தாத்தா வழியில் சுதந்திர தின வழிபாடுகளை தவறாமல் நடத்தி வரும் அவரது பேரனும், ஸ்ரீவைகுண்டம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவருமான செந்தில்குமார் கூறுகையில், எங்க குடும்பத்தில் மூன்று தியாகிகள் இருந்தது பெருமைக்குரியது. தன் மீது தீராத பற்று கொண்டிருப்பதை அறிந்த காத்தியடிகள் நேரில் வந்து எங்கள் தாத்தாவை சந்தித்துள்ளார். அப்போது சுதந்திர போராட்ட நிதியாக ரூ.3 ஆயிரம் கொடுத்து காந்தியின் மனதில் இடம் பிடித்து விட்டனர் எனது தாத்தாவும் பாட்டியும். எங்க தாத்தா கட்டிய தேசிய சுதந்திர விநாயகர் கோவிலில் துவங்கப்பட்ட சுதந்திர தின குடியரசு தின விடுதலை போராட்ட வரலாற்று வழிபாடுகள் இன்றும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.