ஆதிச்சநல்லூரில், இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ‘சைட் மியூசியத்தில்’ (Site Museum) மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் திருச்சி மத்திய தொல்லியல் இயக்குநர் அறவாழி அவர்களுக்கு, பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் கழக நிறுவனர் முத்தாலங்குறிச்சி காமராசு நன்றி தெரிவித்துள்ளார்.
வரலாற்றுப் பின்னணி: ஆதிச்சநல்லூர் உலக நாகரிகத்தின் தொட்டிலாகும். இவ்விடத்தில் 1876-ல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் ஆய்வு செய்தார். தொடர்ந்து 1902-ல் அலெக்ஸாண்டர் ரீயாவும், 2004-ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் தியாக சத்தியமூர்த்தியும் ஆய்வு செய்தனர். அப்போது தியாக சத்தியமூர்த்தியுடன் ஆய்வில் இருந்தவர் முனைவர் அறவாழி ஆவார். காலங்கள் கடந்தும் 2017-ஆம் ஆண்டு வரை இதற்கான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி இவ்வழக்கை நடத்தினார். அப்போதைய நீதியரசர்கள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் மற்றும் தாரணி ஆகியோர் இவ்வழக்கை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர்.
அரசின் நடவடிக்கைகள்: இக்காலகட்டத்தில் தமிழக அரசு ஆதிச்சநல்லூரில் இரண்டு கட்டங்களாகவும், சிவகளையில் மூன்று கட்டங்களாகவும், கொற்கையில் முதற்கட்டமாகவும் அகழாய்வு நடத்தியது. அதில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைத்துத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தது.
இதற்கிடையில், மத்திய தொல்லியல் துறை மூலம் திருச்சியில் புதிய தொல்லியல் வட்டம் உருவாக்கப்பட்டு, முனைவர் அருண்ராஜ் அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரின் முயற்சியால் இந்தியாவிலேயே முதல் ‘சைட் மியூசியம்’ ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டது. இதற்கு அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், இடத்தேர்வு உள்ளிட்ட பல உதவிகளைச் செய்தார். 2023-ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட மழை வெள்ளத்தால், அங்கிருந்த மாதிரி அருங்காட்சியகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ‘சி’ (C-Site) தளத்தில் அகழாய்வு செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பந்தல் மழையினால் சேதமடைந்து விழும் நிலையில் இருந்தது.

புதிய முன்னெடுப்புகள்: தற்போது திருச்சி மண்டல தொல்லியல் இயக்குநராக முனைவர் அறவாழி நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும் ஒரு தமிழர் இப்பொறுப்பை ஏற்றது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது முயற்சியால் 2026-27 நிதியாண்டிற்காக, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை ஆதிச்சநல்லூர் வரலாற்றுத் தளத்தில் சிறப்புப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆற்றங்கரைப் பகுதியில் (‘சி’ (C-Site) தளத்தில்) அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு உறைவிடங்கள் (Protection Shelters) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொல்பொருட்களின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பூமிபூஜை மற்றும் வரவேற்பு: இப்பணிகளின் தொடக்கமாக 12.04.2026 அன்று ஆதிச்சநல்லூர் ‘சி’ தளத்தில் பூமிபூஜை நடைபெற்றது. இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில், கண்காணிப்புத் தொல்பொருள் ஆய்வாளர் அறவாழி இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்ட வந்த இயக்குநர் அறவாழி அவர்களுக்கு, முத்தாலங்குறிச்சி காமராசு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:
“ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதன்முதலாகச் சைட் மியூசியம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிகள் முடங்கிக் கிடந்தது வருத்தமாக இருந்தது. தற்போது 2004-ல் இங்கு அகழாய்வு செய்தவரே இயக்குநராகப் பொறுப்பேற்றிருப்பது நம்பிக்கையைத் தருகிறது. அவர் வந்தவுடன் பொதுமக்களால் வழங்கப்பட்ட நிலத்தில் முள்வேலி அமைப்பது மற்றும் கிடப்பில் இருந்த பணிகளைத் தொடங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமையும் பணிகள் தற்போது தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மாநில அரசு அமைத்த பொருநை அருங்காட்சியகத்தைப் போலவே, ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தையும் மிகச் சிறந்த முறையில் செம்மைப்படுத்த வேண்டும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



