நாசரேத் அருகே விவசாயி வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
தூத்துக்குடி மாவட்டம், நசாரேத் அருகே உள்ள ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் செல்வின் ராஜதுரை (30) விவசாயி. இவர் மனைவி மாலதி (24) கடந்த 18ம் தேதி மதியம் 2 மணியளவில் தம்பதியர் இருவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவுக்கு மேலே வைத்து விட்டு வயலுக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை 7 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். வீட்டு சாவி அதே இடத்தில் இருந்ததனால் எந்த விதமான சந்தேகமும் படவில்லை. மறுநாள் காலை மாலதி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நெக்லஸ், 3 பவுன் செயின், 3 பவுன் கோபி செயின், ஒரு ஜோடி வளையல் ஆக மொத்தம் 11 பவுன் நகையை காணவில்லை.
இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் வீட்டின் சாவியை எடுத்து, கதவைத் திறந்து பீரோவில் இருந்த நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இது குறித்து செல்வின் ராஜதுரை நாசரேத் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் விசாரணை நடத்தி வருகிறார். விவசாயி வீட்டில் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.