தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரச்சித்தி பெற்றது நவத்திருப்பதி கோவில்கள். இந்த கோவிலில் 9வது மற்றும் கடைசி திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் குருஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் பங்கு உற்சவத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலை 7 மணிக்கு திருமஞ்சணம் நடந்தது. 8.30 மணி அளவில் கொடிப்பட்டம் சுற்றி வந்தது. அதன்பின்னர் கொடியேற்றப்பட்டு அதன் பின்பு தேரில் கால்நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் சுவாமி பொலிந்துநின்றபிரான் பரங்கி நாற்காலி, சிம்மவாகனம், அனுமார் வாகனம், சேஷவாகனம், கருட வாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம், புன்னைமர வாகனத்திலும் தினமும் மாடவீதி மற்றும் ரத வீதிகளில் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


