செய்துங்கநல்லூர் அருகே கட்டிய 2 ஆண்டில் உடைந்த ஷட்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை பல லட்சம் செலவு செய்தும் விவசாயத்துக்கு பயன் இல்லாமல் போனதாக விவசாயிகள் புகார் செய்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் சிறப்பான அணைகளுக்குள் மருதூர் அணையும் ஒன்று. இந்த அணை மேலக்கால்வாயில் முதல் குளமாக முத்தாலங்குறிச்சி குளம் உள்ளது. இந்த குளத்துக்கு சென்னல் பட்டி அருகே தண்ணீர் பிரிக்கப்பட்டு முக்கவர் சாணல் மூலமாக கொண்டு வரப்படுகிறது. வரும் வழியில் கோவில் பத்து, படுகையூர், சித்திரா நகர், முறப்பநாடு, பக்கப்பட்டி, ஆழிகுடி உள்பட பல பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு அதன் பின் முத்தாலங்குறிச்சி குளத்தில் விடப்படுகிறது.
இந்த முக்கவர் சாணலில் இருந்து குளத்துக்குள் பிரியும் இடத்தில் காலம் தொட்டே ஷட்டர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஷட்டர் பழுதான காரணத்தினால் புதிய ஷட்டர் ஒன்றை அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஒரு லட்சம் செலவில் புதிய ஷட்டர் மற்றும் மடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக மடையில் புதிய மடை அமைக்கப்பட்டு ஷட்டர் அமைக்கப்பட்டது. 2 வருடம் கூட மூடியாத நிலையில் இந்த ஷட்டர் உடைந்து விழுந்து விட்டது.மடையும் மிக மோசமாக உள்ளது.
இது குறித்து முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்து துணை தலைவர் நடராஜன் கூறும் போது, குளத்தில் முன்பு போடப்பட்ட பழைய மடையில் ஷட்டர் மட்டுமே உடைந்திருந்தது. இந்த ஷட்டரை பழுது பார்த்திருந்தால் குறைந்த செலவில் பணி நடந்து இருக்கும். ஆனால் பழைய மடைக்கு சற்று முன்பு புதிதாக கான்கிரிட் போடப்பட்டு புதிய ஷட்டரை லட்ச ரூபாய் செலவு செய்து வைத்தார்கள். ஆனால் 2 ஆண்டுக்குள் அந்த ஷட்டர் உடைந்து விழுந்து விட்டது. கட்டப்பட்ட மடையும் சரியாக இல்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளோம். உடனடியாக பழைய மடையில் ஷட்டரை மட்டும் பழுது பார்த்து முறையாக அமைத்து தரவேண்டும் என அவர் கூறினார்.
தற்போது பழைய மடை கூட கற் கட்டடமாக பிரமாண்டமாக உள்ளது. ஆனால் புதிதாக போடப்பட்ட மடை உறுதியில்லாமல் உள்ளது. எனவே இந்த மடையை கட்ட காரணமான பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


