ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் வழங்கப்படுவதைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக தேர்தலில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதை மனதில் வைத்து மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் 2 வார காலம் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
தற்போது வரும் மே 3ம் தேதி காவரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே 3ம் தேதி டெல்டா மாவட்டத்தில் உள்ள 5 மாவட்ட விவசாயிகளை திரட்டி தஞ்சாவூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி கடந்த 70 நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தினசரி 1 கோடியே 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்படும் தண்ணீரை நிறுத்த வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டு முன்பு வரும் மே 10ம் தேதி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று கூறப்படும் நிலையில் பல இடங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் மே 6ம் தேதி உயர் மின்னழுத்த கோபுரம் எதிர்ப்பு மாநாடு நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன் வட்டி சலுகையை மத்திய அரசு ரத்து செய்ய முயலுகிறது. இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்காக அகில இந்திய அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்க தலைவர் பெருமாள், இளைஞர் பெருமன்ற செயலாளர் முத்து ஆகியோர் உடனிருந்தனர்.


