புத்தகத்தின் பெயர்: “தவழ்ந்து வரும் தாமிரபரணி”
ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு
வகை: வரலாறு
பக்கங்கள் : 520
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு
-பாரதியார்
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி தேசிய புறவழிச்சாலையில் பயணம் செய்தால் பிரம்மாண்டமான தொல்லியல் அருங்காட்சியகமான பொருநை (Porunai Museum) உயர்ந்து நிற்பதை காணலாம். இது திறக்கப்பட்ட நாளிலிருந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள், தொல்லியல்துறை ஆய்வாளர்கள் என எல்லா தரப்பினரையும் ஈர்த்த வண்ணமாய் உள்ளது. அரசுப் பொதுத்தேர்வு நடந்துகொண்டிருந்த வேளையில் தனியாக அருங்காட்சியகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். அந்த மாலை வேளையில் அங்கும் இங்குமாக சில மாணவர்கள் சுற்றுலாப்பயணிகள் இருந்ததால் சில மணிநேரங்கள் பொறுமையாக ஆரவாரமில்லாமல் கண்டு கழிப்பதற்கு அது வசதியாக இருந்தது. பின்பு அந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள ரெட்டியார்பட்டி மலையின் உச்சியில் (வரையாடு சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது) சில மணித்துளிகள் அமர்ந்து பிரமிப்பூட்டும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பக்கத்தின் புவியியல் தோற்றத்தின் அழகை கண்டு ரசித்தேன். அந்த அனுபவம் உணர்ச்சிகரமாக இருந்தது.

தாமிரபரணி ஆற்றங்கரையின் 3,200 ஆண்டுகாலப் பழைமையான நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில், சுமார் ரூ.67 கோடி மதிப்பில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தமிழர் பண்பாடு போற்றும் அருங்காட்சியகம் டிசம்பர் 20, 2025 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், ஆபரணங்கள், இரும்பு ஆயுதங்கள் மற்றும் தமிழி எழுத்துக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தாமிரபரணி நதிக்கரை நாகரிகத்தின் தொன்மையையும், முற்காலத் தமிழர்களின் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் முயற்சி.
தாமிரபரணி ஆறு (பொருநை) மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் தோன்றி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக சுமார் 128 கி.மீ. பாய்ந்து மன்னார் வளைகுடாவில் கலக்கும், தமிழ்நாட்டின் ஒரே வற்றாத நதியாகும். சங்க இலக்கியங்களில் ‘தண்பொருநை’ எனப் போற்றப்படும் இது, பாண்டியர்களின் முத்து குளித்தல் மற்றும் பண்பாட்டு மையமாகத் இது ஒரு காலத்தில் திகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க பொருநை நாகரிகத்தையும் பண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் எந்த புத்தகம் உள்ளது என யோசித்து பார்த்தேன். அப்போது என் நினைவுக்கு வந்தது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “தவழ்ந்து வரும் தாமிரபரணி” என்கிற நூல்.
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை தொல்லியல் சான்றுகள், பாலம், சாலைகள் மற்றும் அபூர்வ சிற்பங்கள் குறித்து 35 வருட உழைப்பில் உருவான ஆவணப் புத்தகமாக கருதப்படுகிறது. இது இவரின் 55 வது நூல்.
ஆசிரியரை நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன். அருட்தந்தை அதிரியான் கெளசானல் வாழ்க்கை வரலாற்றின் தடயங்களை அறியும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். குறிப்பாக காணி மலைவாழ் மக்கள் வாழும் கட்டளைமலையில் 1892 ஆம் ஆண்டு கௌசானல் சாமி அவர்களால் அம்மக்கள் ஆற்றைக் கடக்க அவர் கட்டிய பாலம் இன்றும் நிலைத்திருப்பதை பத்திரிக்கையில் முதலில் வெளிக்கொணர்ந்தவர். பல காட்டாற்று வெள்ளத்தை கண்ட அந்தப் பாலம் 130 ஆண்டுகளை கடந்து இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. அவரை சந்திக்கும்போது நான் கேட்கும் கேள்வி சார் தங்களது 100 வது புத்தகம் எப்போது வெளியாகிறது? 100 வது புத்தகத்தை எழுதி முடிக்கும் பணியில் தீவிரமாக இருந்து வருகிறார்.
“தவழ்ந்து வரும் தாமிரபரணி” புத்தகம் 31 தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது. முதல் அத்தியாயமான “தரணி போற்றும் பரணி நதி” என தொடங்கி “மாவட்ட கலெக்டர்கள் எழுத பயன்படுத்திய நூல்கள்” வரையிலான அத்தியாயங்கள் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது தொடர்பான பழங்காலத்து அரிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. தோரிக்காடு, சேர்வலாறு இரும்பு பாலம், இஞ்சுக்குழி, திருப்புடைமருதூர், ஏரல் பாலம், லூர்து சாமி சிலை, என்டிரிக் என்டிரிகியூஸ் வரலாறு என படங்கள் விரிகிறது. பொருநை எனும் தாமிரபரணி ஏன் அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதன் அவசித்தை இதில் அலசியிருக்கிறார் ஆசிரியர். ஆதிச்சநல்லூர் தொண்மம் உலகறியச் செய்ய வழக்குத் தொடுத்தவர்.
சேர்வலாறு, மணிமுத்தாறு,பச்சையாறு, சிற்றாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணியின் நதியிலிருந்து தோன்றிய கிளை ஆறுகள்.
இந்த ஆற்றின் கரையோரம் தான் ஆதிச்சநல்லூர் சிவகலை, கொற்கை தொல்லியல் வரலாற்றின் மிக முக்கிய பக்கங்களாக உள்ளன.
இந்தியாவில் முதன் முதலில் ஆதிச்சநல்லூரில் தான் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன என்பது வரலாறு.
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியை முதன்முதலில் 1876 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் (Dr. Jagor) தொடங்கினார். இந்த இடத்தின் தொல்லியல் முக்கியத்துவத்தை 1902-1904 ஆம் ஆண்டுகளில் முறையான அகழாய்வை மேற்கொண்டவர் அலெக்சாண்டர் ரியா (Alexander Rea) என்ற பிரிட்டிஷ் தொல்லியலாய்வாளர்.
தாமிரபரணியின் வரலாற்றை அறியும் முயற்சியில் இறங்குவோம்.
வாசிப்போம்.
வாசிப்பை நேசிப்போம்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
பிரியமுடன்
அருட்சகோ.அன்பரசன் திஇச பாளையங்கோட்டை
நன்றி
06, ஏப்ரல் 2026
திங்கட்கிழமை


