முக்கவர் கால்வாய் சீரமைக்க ஓதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் எங்கே? ஓட்டபிடாரம் வேட்பாளர்கள் கவனிப்பார்களா? என வாக்காளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
தாமிரபரணி நதியில் 7 வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் மருதூர் மேலக்கால் உள்ளது. இந் கால்வாய் வழியாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இக்கால்வாயில் முத்தாலங்குறிச்சி, குட்டைக்கால், கொள்ளீர் குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர், தூதுகுழி, பெட்டைக்குளம், கிருஷ்ணன் குளம், கருங்குளம் பெரியகுளம், வீரளபேரிகுளம், கால்வாய் குளம், வெள்ளூர், தென்கரை, நொச்சிகுளம், புதுக்குளம், முதலைமொழிகுளம், தேமாங்குளம், வெள்ளரிக்காய் யூரணி குளம் உள்பட பல குளங்கள் உள்ளன. இந்த கால்வாய் வழியாகத்தான் சடையனேரி கால்வாய் பகுதிக்கும் தண்ணீர் செல்கிறது. இந்த பகுதியில் சடையனேரி கால்வாய் விரிவு படுத்த 1997 ஆம் ஆண்டு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடந்தது. அந்த சமயத்தில் மருதூர் மேலக்கால்வாய் 4 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டது. தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மருதூர் மேலக்கால் சீர் செய்வதற்கு 9 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் மருதூர் மேலக்கால்வாயில் கான்கிரிட் தளம், சுவர் அமைக்கப்பட்டு பணி நடந்தது. இதனால் அதிகளவு தண்ணீர் மருதூர் மேலக்கால்வாயில் எடுக்க முடிந்தது.
ஆனாலும் இந்த பகுதியில் உள்ள குளங்களில் உள்ள மடைகள் அனைத்தும் உடைந்து கிடந்தன. முதல் குளமான முத்தாலங்குறிச்சி குளத்துக்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் முக்கவர் சானல் செல்கிறது. இந்த சானலும் தூர்ந்து போய் கிடந்தது. எனவே முக்கவர் சானலை கான்கிரிட் அமைக்கவும், 16 குளங்களில் உள்ள மடைகளை சீரமைக்கவும் உலக வங்கி திட்டம் 10 கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை திட்டங்கள் வட்டத்தின் சிறப்பு திட்டம் நான்குனேரி கோட்டம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முதல் கட்ட பணியை பொதுப்பணி துறையினர் கடந்த வருடம் மே மாதம் துவங்கினர். சுமார் 2 கோடி ரூபாய் செலவில் முக்கவரில் இருபுறமும் கான்கிரிட் சுவர் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக வல்லநாடு அருகே உள்ள பக்கபட்டி முக்கவர் சானலில் பொக்கலின் இயந்திரம் மூலம் தூர் வாரப்பட்டது. இந்த பணியில் மிகவும்குறுகலாக உள்ளது. இதுபோன்று கால்வாய் அமைத்தால் முத்தாலங்குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வராது என விவசாயசங்க விவசாயிகள் வேலையை முற்றுகை யிட்டு நிறுத்தினர். அதன் பிறகு அந்த வேலை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த திட்டம் நிறைவேறினால் ஒட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள மு.கோவில்பத்து, மு.புதுக்கிராமம், கீழப்புத்தனேரி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆகிய கிராம விவசாய மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் ஓதுக்கீடு செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் என்ன ஆச்சு என்ற கேள்வி குறி, அதிமுக வாக்கை பெரிதாக பாதிக்கும் என கருதப்படுகிறது.