கடந்த 1ம் தேதி முதல்வர் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இதனையடுத்து மூன்று அணைகளில் இருந்தும் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தாமிரபரணி பாசனத்தைப்பொறுத்தவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பாசனமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும் விவசாயம் பெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால். அதே போன்று ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் மூலம் இந்த 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் தாமிரபரணி பாசனத்தில் கார், முன்கார், பிசானம் ஆகிய மூன்று போகம் விளைச்சல் நடந்தது. ஆனால் தற்போது ஒரு போகம் விளைவதே கேள்விக்குறியாகி விட்டது.
இந்நிலையில் வருடம் தோறும் பிசான சாகுபடி செப்டம்பர் மாதம் துவங்கும். ஆனால் மழை இல்லாத காரணத்தினாலும், அணையில் தண்ணீர் திறக்காத காரணத்தினாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல்வர் அறிவிப்பையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் விவசாய பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் தான் விவசாய பணிகளுக்காக முதற்கட்டமாக நிலங்களை சீரமைத்து தொழி அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து விவசாயி கணேஷ்பாண்டியன் என்பவர் தெரிவிக்கையில்,
வருடம் தோறும் பிசான சாகுபடி செப்டம்பர் மாதம் துவங்கும். ஆனால் இந்தாண்டு தண்ணீர் இல்லாத காரணத்தினால் விவசாய பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் கடந்த 1ம் தேதி முதல்வர் அறிவித்ததையடுத்து அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் எங்களுக்கு அரசு கூறியபடி 150 நாட்களும் முழுமையாக தண்ணீர் திறந்தால் மட்டுமே விவசாய பணிகள் செய்ய முடியும் என்று நாங்கள் பணிகளை துவங்குவதில் தாமதப்படுத்தி வந்தோம். ஆனால் கடந்த மூன்று தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியுள்ள காரணத்தினால் தற்போது இந்த விவசாயப்பணிகளை துவங்கியுள்ளோம் என்றும் மேலும் இந்த விவசாய பணிகளை முழுமையாக நாங்கள் செய்ய அரசு எங்களுக்கு முறையாக உரம் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


