தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆசிர்வாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவு. இவரது மகன் மகேந்திரன். கடந்த மே மாதம் பேய்குளம் அருகே ஒரு வழக்கு சம்பந்தமாக மகேந்திரனின் சகோதரன் துரை என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவரை கைது செய்ய இயலாத நிலையில் சாத்தான்குளம் போலீசார் மகேந்திரனை பிடித்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கினர். பின்னர் குற்றுயிரும் குலையுயிருமாக மகேந்திரனை விடுவித்தனர். போலீசார் இதுகுறித்து யாரிடமும் புகார் தெரிவிக்க கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் கடந்த ஜூன் 13ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்சம்பவத்தை மகேந்திரன் தாய் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு அளித்தார். இதை குறித்து உயர்நீதிமன்றம் விசாரித்தபோது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிபிசிஐடி தூத்துக்குடியில் உள்ள மகேந்திரன் சகோதரி வீட்டில் மகேந்திரன் தாயார் வடிவு சகோதரி சந்தனமாரியிடம் தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.அதனை தொடர்ந்து மகேந்திரன் தாயார் சகோதரிகள் அவருடைய சொந்த ஊரான பேய்குளம் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவருக்கு 2 பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகேந்திரன் கொலை வழக்கு சம்பந்தமாக வழக்கு விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த வாரம் சமர்ப்பித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்று பேய்குளத்தில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். மகேந்திரனின் தாயார் வடிவு மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—


