தமிழகத்தில் வற்றாத ஜீவ நதி என பெயரெடுத்திருக்கும் ஒரே நதி தாமிரபரணி ஆறு மட்டும்தான். குறைந்த அளவிலாவது தண்ணீர் ஆற்றில் கிடக்கும். அப்படிபட்ட ஆறு பாயும் மாவட்டத்தில்தான், வடக்குபகுதியும் தெற்கு பகுதியும் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட தென்பகுதிகளும் கோவில்பட்டி, விளாத்திகுளம் என வடக்கு பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிகம் இருக்கிறது. விளாத்திகுளத்தை சுற்றி வைப்பாறு ஓடியும் அந்த பகுதியை சுற்றி வானம் பார்த்த பூமிகள் அதிகம் இருக்கிறது.
இந்த நிலையை படிப்படியாக மாற்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை தொட்டுக் கொண்டு கடைசியில் கடலுக்குள் சங்கமிக்கும் ஆற்று நீரில் ஒருபகுதியை தேவையான பகுதிக்கு திருப்பி அந்த பகுதிகலையும் பசுமையாக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ரெண்டு மூன்று மாவட்டங்களை தாண்டி கடலுக்குள் போகும் தண்ணீரின் அளவு, காவிரியில் போராடும் நீரின் அளவைவிட அதிகம் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது நம்முள் உருவாகி நம்முள் முடியும் தண்ணீரை முறைப்படுத்துவது நமது கடமை என்கிறார்கள் விவசாயிக்ளும் மாவட்ட மக்களும்.
தாமிரபரணி ஆற்றை கடந்து சில மைல் தூரத்தில் கூட வறண்ட பகுதி நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது வரும் தண்ணீரையாவது அந்த பகுதிக்கு திருப்பி அப்பகுதி மக்களின் தாகத்தை தீருங்கள் என்று கேட்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் டிடிகே.கார்த்திக்ராஜா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது :-
’’கரைபுரண்டோடி கடலில் கலக்கும் தண்ணீரில் ஒருபகுதியை வறண்டு கிடக்கும் பகுதிக்கு சடையநேரி கால்வாய் வழியாக திருப்புங்கள் என்கிற கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் அதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. தற்போது வடகிழக்கு மழை பெய்து வருகிறது. குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிற அளவில் மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கும்.
அப்படி கடலில் கலக்கிற தண்ணீரில் ஒருபகுதியை சடையநேரி கால்வாய் வழியாக தெற்கே திருப்பினால், உடன்குடி, புத்தன்தருவை, கொம்மடிக்கோட்டை, படுக்கப்பத்து, சுண்டங்கோட்டை, நடுவைக்குறிச்சி, முதலூர், கடாச்சபுரம், பண்டாரபுரம், பண்ணம்பாறை, ஆனந்தபுரம், பனைக்குளம், பேய்குளம் உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வளம் பெறும்.
எனவே இந்த முறை கடலுக்கு செல்லும் தண்ணீரில் ஒருபகுதியை மருதூர் கால்வாயிலிருந்து சடையநேரி கால்வாய் மூலம் அப்பகுதிகளுக்கு திருப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் கேட்பது, மழை காலங்களில் கடலுக்கு அனுப்பப்படும் உபரி நீரைத்தான். அதையாவது முறையாக திருப்பி விட வேண்டும். அப்படி திருப்பிவிடும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


