செய்துங்கநல்லூர் அருகே அடிக்கடி கட் அடிக்கும் முத்தாலங்குறிச்சி அரசு பேருந்தால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
நெல்லை சந்திப்பில் இருந்து செய்துங்கநல்லூர் வழியாக முத்தாலங்குறிச்சிக்கு 2 அரசு பேருந்து 10 சுற்று சென்று வருகிறது. இதில் 3 ஜி , 23 பி ஆகிய இரண்டு பேருந்து பயணிகளுக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது இடைதேர்தல் நடைபெறும் வி.கோவில்பத்து, நாட்டார்குளம், இந்திராகாலனி, மேல நாட்டார்குளம், இசக்கியம்மன் கோயில், தெற்கு வெட்டியபந்தி, வடக்கு வெட்டியபந்தி, வள்ளுவர் காலனி, கொள்ளீர் குளம், விட்டிலாபுரம், ஆழிகுடி, இந்திரா காலனி, பசும்பொன்நகர், முத்தாலங்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு இந்த பேருந்து சென்று வருகிறது. காலை மாலை பள்ளி மாணவ மாணவிகள், செய்துங்கநல்லூர் சந்தைக்கு வரும் பொதுமக்கள், ஆஸ்பத்திரி செல்லும் முதியோர்கள் என எப்போதுமே இந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது இல்லை.
இதுகுறித்து முத்தாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் நடராஜன் கூறும் போது, எங்கள் கிராமத்துக்கு இரண்டு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை ஒரே பேருந்தாக முறைப்படுத்தி காலையில் இருந்து இரவு வரை எங்கள் ஊருக்கு மட்டுமே இயக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகபோராடி வருகிறோம். ஆனால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் எங்கள் ஊருக்கு வரும் 3 ஜி, 23 பி ஆகிய இரண்டு பேருந்துகளும் ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு ஊருக்கு செல்கிறது. சில வேளை பழுதாகி விட்டால் அனைத்து ஊர்களுக்கும் பஸ் இல்லாமல் போய் விடுகிறது. குறிப்பாக முத்தாலங்குறிச்சி வரும் நேரத்தினை குறிவைத்து அரசு போக்குவரத்து கழகத்தினை நிறுத்தி விடுகிறார்கள் . எனவே முத்தாலங்குறிச்சி கிராமத்துக்கு ஒரே பேருந்தை இயக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடிக்கடி கட் அடிக்கும் பேருந்து குறித்து நெல்லை அரசு போக்கு வரத்து கழக கமர்சியல் மேலாளரிடம் பேசும் போது விரைவில் முத்தாலங்குறிச்சிக்கு சீராக பேருந்து அனுப்ப நடவடிக்கை எடுப்போம். ஒரே பேருந்தை அனுப்பவும் எங்கள் வசம் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார். ஒட்டப்பிடாரம் இடைதேர்தலில் கடைசி ஓரத்தில் இருக்கும் இக்கிராமங்கள் பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு செய்துங்கநல்லூர் வரவேண்டிய 23 பிபேருந்து வரவில்லை. எனவே காத்து இருந்து பயணிகள் பல ஆட்டோக்கள் பிடித்து அதன் மூலமாக முத்தாலங்குறிச்சி கிளம்பினார்கள். இது போல் அடிக்கடி பேருந்து கட் அடிக்கும் போது, அதை நம்பி பயணிகள் காத்திருக்க மிகவும் யோசனை செய்ய வேண்டியது உள்ளது. இதுபோல நம்பிக்கையில்லாமல் கிடைக்கும் வாகனத்தில் ஊருக்கு பயணிகள் சென்று விடுகிறார்கள். அதன் பின் கலெக்ஷன் இல்லை என காரணம் காட்டி அரசுபேருந்தை நிறுத்த திட்டமிடுகிறார்கள் போக்குவரத்து அதிகாரிகள். என்கிறார்கள் பயணிகள்.


