செய்துங்கநல்லூரில் மதுவில் விஷம் கலந்து ஒர்க் ஷாப் உரிமையாளர் உயிரை மாய்த்துக்கொண்டார். மகளுக்கு பெண் பார்க்க வந்த இடத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மலையாண்டி (48) இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மலையாண்டி சென்னையில் டூவீலர் பஞ்சர் பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார்.
இவரது மூத்த மகளுக்கு பெண் பார்த்து வந்தனர். இதற்காக சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் மலையாண்டி செய்துங்கநல்லூர் வந்தார். இங்கு வந்தபின் மது அருந்தியுள்ளார்.
இதை பார்த்த மனைவி, மகளுக்கு மாப்பிள்ளை நல்லபடியாக அமைய வேண்டும் என்று ஊர் வந்துள்ளோம். இங்கு வந்தும் குடிக்கிறீர்களே.. இது உங்களுக்கே தப்பா தெரியவில்லையா? என்று கண்டித்துள்ளார். இவர்கள் தகராறுக்குப்பின் நேற்று மாலை மலையாண்டி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அங்குள்ள வாய்க்காலுக்குச் சென்று தான் வாங்கிச்சென்ற மதுவுடன் விஷத்தை கலந்து குடித்துவிட்டார். அதன்பிறகு அங்கே படுத்துக்கொண்டார். வெளியில் சென்றவர் ஏதும் பண்ணிவிடக் கூடாது என்று பயந்த பிள்ளைகள் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது மலையாண்டி வாய்க்கால் கரையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஊருக்கு வந்த இடத்தில் ஒர்க்ஷாப் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.