கருங்குளம் அருகே நடுரோட்டில் மரம் சாய்ந்த காரணத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொங்கல் அன்று ஊருக்கு வந்த மக்கள் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானார்கள்.
நெல்லை திருச்செந்தூர் மெயின் ரோடு அதிக போக்குவரத்து உள்ள சாலையாகும். இங்கு கருங்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை சாலை ஓரத்தில் மிகவும் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் காற்று மழை காலங்களில் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்துவது வழக்கமாகும். ஆனால் பொங்கல் அன்று அதிகாலை தீடீரென்று கருங்குளம் & புளியங்குளத்துக்கு இடையே நின்ற மிகவும் பழமையான புளிய மரம் சாலையில் விழுந்து விட்டது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் பொங்கலை முன்னிட்டு வெளியூரில் இருந்து வாகனங்கள் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் போலிசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போக்குவரத்தினை கருங்குளம் – கொங்கராயகுறிச்சி ஆற்று பாலம் வழியாக மாற்றி விட்டனர். அதன்பின் தீயணைப்பு படை மூலமாக மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொங்கல் திருவிழாவிற்கு வந்த பயணிகள் பரிதவித்தனர்.