தூத்துக்குடி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சத்யநாராயணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் தரிசனம் தந்தார்.
பிரசித்தி பெற்ற தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் சத்யநாராயண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையான சனிக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாலை 6 மணிக்குக் கோபூஜை மற்றும் விஸ்வரூப தரிசனத்துடன் விழாத் தொடங்கியது.
அதிகாலை 4:30 மணி முதலே கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளத் தொடங்கினர். விழாவையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, சத்யநாராயணர் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். காலையிலிருந்தே சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று நடைபெறும் பிரமாண்டமான ‘ஐந்து கருடசேவை’ திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கமாகும். சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


