நெல்லை ரயில் நிலையத்தில் வழக்கறிஞர் செந்தில் குமார் தலைமையில் பிள்ளையார் சிலை ஒன்று வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு, நாளை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் காவல்துறையினர், “மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி பிள்ளையார் சிலைகளைத் தாமிரபரணியில் கரைக்கக் கூடாது; அவற்றை வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோயிலில் உருவாக்கப்பட்டுள்ள ஊரணியில்தான் கரைக்க வேண்டும். ஆகவே, இங்குள்ள சிலையை ஆற்றில் கரைக்கக் கூடாது” எனக் கூறினர்.
இந்த நிலையில், பிள்ளையார் பேசுவது போல விழிப்புணர்வுப் பதாகை ஏந்தி வழக்கறிஞர் செந்தில் குமார் போராட்டத்தில் இறங்கினார். அந்தப் பதாகையில், “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மீன்களுக்கு உணவாகக்கூடிய கிழங்கு மாவு, ஜவ்வரிசி மாவு மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்டு, விதைப்பந்துகள் வைத்துச் செய்யப்பட்ட என்னை, தாமிரபரணி ஆற்றில் கரைப்பதற்குத் தடை விதிக்கும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமே, தமிழக அரசே!

தாமிரபரணி ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பைகள் கலப்பதை எப்போது நிறுத்துவாய்? 59 கோடி ரூபாயில் தாமிரபரணி நீர் ஓட்டத்தைத் தடை செய்யும் மாநகராட்சி திட்டத்தை எப்போது தடை செய்வாய்? ஐந்து மாவட்டத்தின் குடிநீரை மாசில்லாமல் எப்போது வழங்குவாய்?” என்று பிள்ளையார் கேட்பது போல வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வழக்கறிஞர் செந்தில் குமார் கூறும்போது, “நாங்கள் பல ஆண்டுகளாக இவ்விடத்தில் பிள்ளையாரை வைத்துத் தாமிரபரணி ஆற்றில் கரைத்து வருகிறோம். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, மீன்களுக்கு உணவாகும் கிழங்கு மாவு கொண்டுதான் இந்த பிள்ளையாரைத் தயார் செய்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் இந்த பிள்ளையாருக்குள் நூற்றுக்கணக்கான விதைகளையும் வைத்துள்ளோம். இவையெல்லாம் சுற்றுப்புறச்சூழல் கெடாமல் நாங்கள் இயற்கையைப் பாதுகாக்கும் விதமாகவே செய்துள்ளோம். இதற்குரிய சான்றிதழையும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்.
ஆனால், தாமிரபரணியில் பிள்ளையாரைக் கரைக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நதி நீரோட்டத்தைத் தடுக்கும் வகையிலும், சாக்கடையை நிறுத்தாமலும் பொழுதுபோக்கும் பூங்கா உருவாக்கும் திட்டத்தினை எப்போது நிறுத்துவீர்கள்? தாமிரபரணியை மாசுபடுத்தும் வகையில் அதில் கலக்கும் சாக்கடையை எப்போது நிறுத்துவீர்கள்?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
நெல்லை சந்திப்பில் பிள்ளையார் பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்த இந்த விளம்பரப் பதாகை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


