013. போராட்ட களத்தில் வெற்றிகளை குவிக்கும் நடிகை ரோகிணி
குழந்தை நட்சத்திர நடிகையாக அறிமுகமாகி, சிறந்த கதாநாயகியாகப் பரிணாமம் பெற்று, சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சகோதரி ரோகிணி. அவர் இயக்குனரானது அப்பாவின் மீசை என்ற திரைப்படத்தில். நெல்லை மண்ணின் மகளான சகோதரி தீபா மூலமாக நான் அவர்களிடம் அறிமுகம் ஆனேன். என்னை அவரது படத்தில் நடிக்க வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு அருகே உள்ள புரிசை என்னும் இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சகோதரி மிகப் பிரமாண்டமாக அந்தப்படத்தினை இயக்கிகொண்டிருந்தார். பொறுமை, வேகம், விவேகம், காலந்தவறாமை, சிக்கனம் உள்பட பல்வேறு நல்ல பண்புகளை நான் சகோதரியிடம் கற்றுக் கொண்டேன். அந்த படம் எதிர்பாராத விதமாக வெளி வரவில்லை. ஆனாலும் சகோதரி மனந்தளரவில்லை. சகோதரி தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். மக்கள் நலன் காக்கப் போராடி வருகிறார். எனக்குத் தெரிந்து அவர் தனி நபராக டெல்லி சம்பவம் உள்பட பல்வேறு சம்பவத்தில் பெண்கள் நலனுக்காகப் போராடி வருபவர். மிகவும் நல்ல பண்பைக் கொண்டவர். திரையுலகில் மிகப் பிரபலமானவர். தனக்குத் தெரியாத திரையுலக பிரபலங்களே இல்லை, என்ற நிலையிலும் கூட ரசிகர்களையும் நண்பர்களையும் உபசரிக்கத் தவறுவதில்லை. வாழ்த்துகள் சகோதரி நீங்களும், உங்கள் மகனும் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்த மண்ணுலகில் பல சாதனைகளைப் புரிய வேண்டும். நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


