
ஆதிச்சநல்லூர் அகழாய்வு, உலக அரங்கில் தமிழனை தலை நிமிர செய்யும் என நாகர்கோயிலில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
நாகர்கோயில் கோட்டார் பயோனியர் முத்து மகாலில் கடந்த பிப்ரவரி 27 ந்தேதி முதல் மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தகத் திருவிழாநடைபெற்று வருகிறது. 8வது நாள் மாலை 4 மணிக்கு கதை சொல்லிகளின் முற்றம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு கதை கூறினர். இந்த நிகழ்வை எழுத்தாளர் பொன்னீலன் துவக்கி வைத்தார். மாலை 6 மணிக்கு புனித சிலுவை மகளிர் கல்லூரி மாணவிகள் நடத்திய பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து 7 மணிக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு “அகழாய்வு அரசியலும் எனது ஆய்வு பயணமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, “உலக அரங்கில் தமிழனை தலை நிமிர செய்யும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு . இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்த இடம் ஆதிச்சநல்லூர் தான். ஆனால் 144 வருட காலமாக ஆதிச்சநல்லூரின் அகழாய்வு அறிக்கை முறையாக வந்து சேரவில்லை. இதனால் தான் நாம் மதுரை உயர் நீதி மன்றத்தினை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மாநில அரசு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய ஏற்பாடு செய்து ஒரிரு நாள்களில் துவக்கப்போகிறார்கள். இது வரவேற்க தக்கது. கீழடியில் அகழாய்வு செய்து 23 மொழிகளில் மிக வேகமாக ஆய்வு அறிக்கையை தந்த தமிழக தொல்லியல் துறை 1 வருடத்துக்குள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை மீட்டெடுத்து தரும் என நம்புகிறேன். மத்திய அரசு ஆதிச்சநல்லூரை புறக்கணிக்கிறது என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால் பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பு வரும்போது தமிழக எம்.பிக்கள் ஆர்வம் காட்டாமல் கீழடி என குரல் கொடுத்து ஆதிச்சநல்லூருக்கு எதுவும் வேண்டாம் என்பது போல நடந்து கொண்டனர். 144 வருடத்துக்கு பிறகு அருங்காட்சியகம் தர இசைந்த மத்திய அரசை பாராட்ட வேண்டாம். கொடுத்த நிதியை நிராகரித்து பேசுவது எந்த விதத்தில் நியாயம். நீதிபதி கிருபாகரன் நீதிமன்றத்தில் கேட்டது போல இந்தியாவில் தானே ஆதிச்சநல்லூர் இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லையே.
தொடர்ந்து பத்திரிக்கையிலும் ஆதிச்சநல்லூருக்கு எதிர் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் சிலர். நமது தமிழ் சங்கம் முதல், இடை, கடை சங்கம் என போற்றப்படுகிறது. முதல் சங்கம் லெமுரியா கண்டம், இரண்டாம் தமிழ் சங்கம், கொற்கை, மூன்றாம் தமிழ் சங்கம் தான் மதுரை, மதுரை கீழடி 2300 வருடம் பழமையானது என உறுதியாகி உள்ளது. ஆதிச்சநல்லூர் 2900 வருடம் பழமையானது என புளோரியா ஆய்வகம் உறுதி படுத்தி விட்டது. முதல் சங்கம் லெமுரியாவை தோண்டினால் தமிழரின் பழமை எங்கோ போய்விடும். நமது தமிழகத்தில் உள்ள 143 தொல்லியல் களத்தில் எந்த களத்தில் தோண்டினாலும் தமிழன் பழமையானவன் என்பதை வெளிப்படுத்தி கொண்டே இருக்கலாம். எனவே நம்மில் தொல்லியல் களத்தில் எந்த களம் பெரிய களம் என வாதம் பண்ண தேவையில்லை. அனைத்துமே தமிழரின் பெருமையை பறை சாற்றுவது தான்.
என்று அவர் பேசினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு, எழுத்தாளர் பொன்னிலன் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை மக்கள் வாசிப்பு இயக்க தலைவர் வீரபாலன் தொகுத்து வழங்கினார். சரலூர் ஜெகன், இனியன் தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் வாசிப்பு இயக்கத்தினை சேர்ந்த கென்னடி நன்றி கூறினார்.