ஆதிச்சநல்லூரில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் தரையில் ஊடுறுவும் ரேடார் கருவி மூலம் துவக்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கு இந்தியாவிலேயே முதல்முதலில் அகழாய்வு நடந்தது. அதன்பின் 1902லிலும் 1903லிலும் அகழாய்வு நடந்தது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் 2004ல் அகழாய்வு நடந்தது. ஆனால் இதன் அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. இந்த அகழாய்வு அறிக்கை உடனே தரவேண்டும். மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யவேண்டும். இங்கு கட்டப்பட்டுள்ள புளியங்குளம் முதுமக்கள் தாழி மையத்தில் எடுத்த பொருள்களை காட்சி படுத்த வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதே போல் சிவகளையிலும், தாமிரபரணி கரையில் உள்ள 37 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கிடையில் மாநில அரசு ஜனவரி மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணிக்கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்று அகழாய்வு தொடங்கி உள்ளது.
நேற்று (31ந்தேதி) 10 பேர் கொண்ட குழுவினர் தாமிரபரணி ஆற்றின் கரையில் 114 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆதிச்சநல்லூரில் 500க்கு 500 மீட்டரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் சுத்தம் செய்துள்ளனர். பின்னர் அந்த இடத்தில் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் சுமார் 7 அடி ஆழம் பார்வையிட்டனர். இந்த குழுவில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், ஆதிச்சநல்லூர் கள பொறுப்பாளர் பாஸ்கரன் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர். இதுபோல் சிவகளையிலும் ஆய்வு நடந்து வருகிறது. மேலும் ஓரிரு தினங்களில் இந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாமிரபரணிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் துவங்க உள்ள நிலையில் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


